தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கும் பணியில் பாஜக தீவிரம்..!!

சென்னை: தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை அமைக்கும் பணியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மேலும், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அரசு திட்ட பயனாளிகளின் வாக்குகளைக் கவரவும் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த பாஜக, ஓர் இடத்தில்கூட வெற்றி பெறவில்லை.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, கோவை தெற்கு, நாகர்கோவில், மொடக்குறிச்சி, திருநெல்வேலி தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பாஜக பெற்றது. இதனால், பாஜக தேசிய தலைமையின் பார்வை தமிழகம் மீது திரும்பியுள்ளது.

இந்நிலையில், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காக வைத்து பணியாற்ற தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக, தென் சென்னை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருப்பூர், கோவை ஆகிய 8 தொகுதிகளில் தேர்தல் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, இந்த 8 தொகுதிகளில் பொறுப்பாளர்களை நியமித்து தொகுதி சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பணிகளை மேற்கொள்வது, மக்களைச் சந்தித்து மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைப்பது உள்ளிட்ட பணிகளில் நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இருப்பினும், பொதுமக்களைச் சந்தித்து வாக்குகளாக மாற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள தற்போதைய கட்சி கட்டமைப்புகள் பாஜக நிர்வாகிகளுக்கு சவாலாக உள்ளன. எனவே, கட்சி கட்டமைப்புகளை பலப்படுத்த தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை உடனடியாக அமைக்கும்படி உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் ஒரு பட்டியலினத்தவர் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அடித்தட்டு மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என்று பாஜக நம்புகிறது.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி 6 கோடியே 36 லட்சத்து 25 ஆயிரத்து 813 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், 3 கோடியே 23 லட்சத்து 91 ஆயிரத்து 250 பேர் பெண் வாக்காளர்கள். 50%க்கு மேல் உள்ள பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு பூத் கமிட்டியிலும் பெண்கள், பட்டியலினத்தவர், இளைஞர்கள் உள்ளிட்டோரை உள்ளடக்கிய 12 பேரை நியமிக்க வேண்டும் என்று தேசிய தலைமை தெரிவித்துள்ளது.எனவே, பூத் கமிட்டிகளை அமைப்பதற்கான பணிகளில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இப்பணிகளை ஆய்வு செய்து பூத் கமிட்டியின் செயல்பாடுகளை வகுக்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வரும் 22-ம் தேதி தமிழகம் வந்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்த உள்ளார். மத்திய அரசின், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பிரதமரின் வீடு கட்டும் திட்ட), சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் தொழில் மேம்பாட்டுக்காக வங்கிகள் வாயிலாக கடன்கள் வழங்கும் பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள், மாநில அரசின் வழியாக செயல்படுத்துவதால், அவை மத்திய அரசின் திட்டங்கள் என்பது மக்களுக்கு தெரிவதில்லை.

எனவே, மத்திய அரசு திட்டப் பயனாளிகளை நேரில் சந்தித்து, மத்திய அரசின் மூலமாக பயனடைந்த விவரத்தை எடுத்துரைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்கு அளிப்பதை உறுதி செய்யவும் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய அடுத்தடுத்த நடவடிக்கைகளின் மூலம், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளில் தேசிய தலைமையின் அறிவுறுத்தலின்படி பாஜக நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்.