பாஜகவுக்கே அதிக சான்ஸ்.. போட்டி போடும் முக்கிய தலைகள்.. துணை ஜனாதிபதி வேட்பாளர் யார்.. குழப்பத்தில் மேலிடம்..!!

டெல்லி: விரைவில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைய உள்ளநிலையில், யாரை வேட்பாளராக நியமிப்பது என்ற குழப்பத்தில் பாஜக சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு திரௌபதி முர்மு என்ற ஒடிசா மாநிலத்தைச் சேந்த பழங்குடியின தலைவரை பாஜக முன்னிறுத்தி உள்ளது.

இவரை குடியரசுத் தலைவராக்குவதன் மூலம் அடுத்து வரும் ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில், நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்பதே பாஜகவின் பிளானாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், மம்தா பானர்ஜி உட்பட எதிர்க்கட்சியினர் பலரும் ஒன்றாக இணைந்து யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளனர்.அதேபோல, தற்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவி காலம் ஆகஸ்ட் 10-ந் தேதியுடன் நிறைவடைகிறது. ஆகையால் அதற்கு முன்னதாக புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும். அதன்படி, 6ல் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அன்றைய தினமே ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

தற்போது, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. துணை குடியரசுத் தலைவர் தேர்தலை பொறுத்தவரை, மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பிக்கள் மற்றும் நியமன எம்பிக்கள் வாக்களிப்பார்கள். மொத்தமுள்ள 775 எம்பிக்களில் 388 எம்பிக்கள் ஓட்டு போட்டால், துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த வரிசையில், பாஜக கூட்டணியிடம் 395 எம்பிக்கள் இப்போதைக்கு இருப்பதால், பாஜக நிறுத்தும் வேட்பாளரே வெற்றி என்று இப்போதைக்கு உறுதியாகி உள்ளது.

அந்த வகையில், வெங்கையா நாயுடு, தன்னை இந்த முறையும் வேட்பாளராக பாஜக நிறுத்தும் என்று நம்பிக் கொண்டு இருக்கிறார். கட்சியில் சீனியர் என்பதாலும், இவருக்கு வேறு பதவி எதுவும் இல்லாத காரணத்தினாலும் இவரை பாஜக வேட்பாளராக தேர்ந்தெடுக்குமா தெரியவில்லை. இந்த லிஸ்ட்டில் டாப்பில் உள்ளவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்தான். இவர் ஏற்கனவே பாஜகவில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக சார்பில் இவர் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வட்டமடிக்கின்றன.

அதேபோல, தமிழக ஆளுநர் ரவியும், இந்த பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்பட்டு வருகிறது. பாஜகவை சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி பெயரும் இதே குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் லிஸ்ட்டில் உள்ளது. இந்த முறை முஸ்லிம் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கும்பட்சத்தில், விரைவில் எம்பி தேர்தல் உள்ள நிலையில், சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக, இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பாஜக கணக்கு போடுகிறது.

அதனால்தான், அப்பாஸ் நக்வி பெயருடன், கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் பெயரும் சேர்ந்தே அடிபடுகிறது. ஆனாலும், எனினும் வேட்பு மனு தாக்கல் முடிய, இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் வேட்பாளரை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. பார்லிமென்டின் இரு சபைகளிலும் பாஜவுக்கு முஸ்லிம் எம்பிக்கள் இல்லாததால், அவருக்கு துணை ஜனாதிபதி வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்பட்ட நிலையில், ஒரு வாரமாகியும் வேட்பாளர் அறிவிப்பதில் தாமதமாகி கொண்டே வருகிறதாம்.

இதற்கு நடுவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவும், துணை ஜனாதிபதி போஸ்டிங் கேட்கிறாராம். பல மூத்த மத்திய அமைச்சர்கள் துணை ஜனாதிபதி போஸ்டிங் கேட்டு கொண்டிருக்கிறார்களாம். இதனால், மேலிடம் குழம்பி உள்ளதாக கூறப்படுகிறது. துணை ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபோலே பாஜக பொறுப்பாளரான ஆர்எஸ்எஸ் இணைப் பொதுச்செயலர் அருண்குமார் ஆகியோரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் ஆகியோர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள்.

அதேபோல, டெல்லியில் இன்று பாஜக பார்லிமென்ட் குழு கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் ஒரு தகவல் வட்டமடிக்கிறது. எப்படியும் இன்றைய தினம் வேட்பாளர் அறிவித்துவிடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. எப்படியும், வெற்றி பெறுவது கடினம் என்பதால், துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ்-கம்யூனிஸ்ட்- திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.