காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை பல்லவன் இல்லம் அருகில் உள்ள அவரது சிலைக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை கூறுகையில், “அனைத்து கட்சிகளும் காமராஜரை மறந்து விட்டன.
கிண்டியில் உள்ள அவரின் நினைவிடம் சிதிலமடைந்து காணப்படுகிறது. அதை சீரமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
வரும் செப்டம்பர் 17-ம் தேதி பிரதமர் மோடியின் பிறந்த நாள் வருகிறது. அன்று மக்களிடம் இருந்து நிதி திரட்டி, காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க தமிழக பாஜக சார்பில் அரசிடம் ஒரு கோடி ரூபாய் நிதி அளிக்கப்படும்.
அந்த நிதியை பயன்படுத்தி, காமராஜரின் வரலாற்றை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நினைவிடத்தை அரசு சீரமைப்பதுடன், கண்காட்சியும் அமைக்க வேண்டும். அதை பார்த்து, காமராஜரை போல் பலரும் தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிப்பர்.
தற்போது உள்ள காங்கிரஸ், காமராஜரின் காங்கிரஸ் இல்லை. திமுக ஆட்சியில் சமூக நீதி என்று கூறுகின்றனர். ஆனால், அக்கட்சியை தோற்றுவித்த தலைவர் பெயரில் உள்ள பல்கலை தேர்வில் ஜாதி தொடர்பான கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இது, எந்த மாதிரியான மன நிலையில் பேராசிரியர்கள் உள்ளனர் என்பதை காட்டுகிறது. காமராஜரின் நேர்மையான ஆட்சியை திரும்பக் கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் ஆசை.
ஆட்சி அதிகாரம் வந்ததும் திமுக அமைச்சர்களுக்கு அதிகார திமிர் வந்து விட்டது. அதற்கு எடுத்துக்காட்டு தான் அமைச்சர்கள் மக்களை அடிக்கும் சம்பவம்; அதிகார மமதையில் திமுக இருக்கிறது.
அதிமுக உட்கட்சி பிரச்சனையில், அக்கட்சியினரே தீர்வு காண வேண்டும். அக்கட்சியை வழி நடத்தும் பொறுப்பு, அதன் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு உள்ளது. பாஜக எந்த நேரத்திலும் அதிமுகவுக்குள் புகுந்து, ‘இப்படி செய்; அப்படி செய்’ என்று சொல்லாது” என்று தெரிவித்தார்.