முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு ரூ.27 லட்சம் செலவில் சமையல் கூடம் கட்ட பூமி பூஜை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  முதலமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டம் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சத்தியமங்கலம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்திற்கு உணவு தயாரிப்பதற்காக சத்தியமங்கலம் நகராட்சிக்குட்பட்ட கட்டபொம்மன் நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வளாகத்தில் நகராட்சி பொது நிதியில் ரூ.27 லட்சம் செலவில் புதியதாக சமையல் கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை  நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நகராட்சித் தலைவர் ஜானகிராமசாமி தலைமை தாங்கினார். கமிஷனர் (பொ) ரவி, துணைத் தலைவர் நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் கலந்து கொண்டு புதிதாக சமையல் கூடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டி பணியினை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சாவித்திரி, நாகராஜ், ஜெயந்தி, உமா, புஷ்பவள்ளி, வேலுச்சாமி, குர்ஷித், புவனேஸ்வரி, ஹிதாயத்துன்னிஷா, சரஸ்வதி, புவனேஸ்வரி சாய்குமார், செல்வி, குமார், அவைத் தலைவர் ஜோசப், துணைச் செயலாளர் மணிகண்டன், பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட பிரதிநிதிகள் கேஎம்எஸ் முருகன், பவுஜில் ஹக், வார்டு செயலாளர்கள், பிரதிநிதிகள், நகர சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதார அலுவலர் சக்திவேல் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.