காவிரி நீரை பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் தஞ்சையில் ரயில் மறியல் போராட்டம்..!

காவிரி நீரை பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்ற 200 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டில் அனண கட்டும் முயற்சியை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் ராசிமணல் பகுதியில் அணை கட்ட அனுமதி அளிக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரத்தின் செயல்பாட்டை முடக்க கூடாது. தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடக அரசு தர மறுத்து வரும் காரணத்தால் தமிழ்நாட்டில் சுமார் 3.50 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை காப்பாற்றவும், 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியை தொடரவும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீரை வழங்க மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர், தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இருந்து முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக புறப்பட்டு ரயில் நிலையம் வந்தனர். ரயில் நிலைய நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பில் ஈடுபட்ட காவல்துறையினர் விவசாயிகளை ரயில் நிலையத்திற்குள்  நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் இருவருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு சிலர் தடையை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைந்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்..