பெங்களூர்-மைசூருக்கு… ஜஸ்ட் 75 நிமிடம் தான்.. ஜனவரியில் திறப்பு..!!

பெங்களூர்: பெங்களூர்-மைசூர் இடையேயான 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடாரின் முக்கிய பகுதிகள் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாகவும், எக்ஸ்பிரஸ் காரிடார் முழுவதையும் 2023 மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இதன்மூலம் பெங்களூர்-மைசூர் இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறையும்.

தென்இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூர், மைசூர் நகரங்கள் உள்ளன. இந்த இரு நகரங்களும் 140 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன. கர்நாடகாவின் தலைநகராக உள்ள பெங்களூரில் இருந்து மைசூரு இடையே 4 வழிச்சாலை உள்ளது.

இவை இரண்டும் முக்கிய நகரங்களாக இருப்பதால் பெங்களூர்-மைசூர் இடையே 10 வழிச்சாலை அமைக்க வேண்டும் என கர்நாடகா அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் வழங்கியது.

அதன்படி பெங்களூர்-மைசூர் இடையே 10 வழித்தடமாக எக்ஸ்பிரஸ் காரிடார் திட்டத்துக்கு 2014ல் ரூ.4,100 கோடி மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு திட்ட மதிப்பீடு அதிகரித்தது. தற்போது ரூ.8350 கோடி செலவில் பெங்களூர்-மைசூர் 10 வழி எக்ஸ்பிரஸ் காரிடார் பணி மேற்கொள்ளப்பட்டு முடிந்துள்ளது. இன்னும் சில பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. இந்த 10 வழிச்சாலையில் 6 வழித்தடங்கள் நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கும், மீதமுள்ள 4 வழித்தடங்கள் சர்வீஸ் ரோடுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்த நெடுஞ்சாலை பணிகள் 2 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி பெங்களூரு -நிடகட்டா இடையே முதல் தொகுப்பு பணியும், நிடகட்டா-மைசூரு இடையே 2ம் கட்ட பணியும் நடைபெற்றது. இந்த சாலையால் பெங்களூர்-மைசூர் இடையேயான பயண நேரம் 3 மணிநேரத்தில் இருந்து வெறும் 75 நிமிடங்களாக குறைய உள்ளது.

இந்த காரிடாரில் 4.22 கிலோமீட்டர் தொலைவுக்கு மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையில் மொத்தம் 9 பெரிய பாலங்கள், 44 சிறிய பாலங்கள், 4 ரயில்வே மேம்பாலங்கள், 64 சுரங்கப்பாதைகள், 4 ஆர்ஓபிகள் (சாலை மேம்பாலம்), ஐந்து புறவழிச்சாலைளை பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலை உள்ளடக்கி உள்ளது. இந்த காரிடாரில் ராமநகர் மாவட்டம் பிடதி, ராமநகர், சென்னராயப்பட்டணா, மண்டியா மாவட்டம் மத்தூர், ஸ்ரீரங்கப்பட்டணா என மொத்தம் 6 புறவழிச்சாலைகள் இணைய உள்ளது.

இந்நிலையில் தான் பெங்களூரு நைஸ் ரோட்டில் இருந்து மைசூரு ரிங் ரோடு சந்திப்பு வரை மொத்தம் 117 கிலோமீட்டர் நெடுஞ்சாலையின் முக்கிய பகுதிகள் அதாவது புறவழிச்சாலைகள் ஜனவரி 2023ல் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்பிறகு மார்ச் மாதம் பெங்களூர்-மைசூர் இடையேயான முழுமையான எக்ஸ்பிரஸ் காரிடாரையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார்.

இதுபற்றி மைசூரு-குடகு தொகுதி எம்பி பிரதாப் சிம்ஹா கூறுகையில்,”மாண்டியா மாவட்டத்தில் உள்ள மத்தூர் வரை பிரதான நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயங்கி வருகின்றன. இதன்மூலம் பெங்களூரு கும்பலகோடுவில் இருந்து அங்கு வெறும் 40 நிமிடத்தில் செல்ல முடிகிறது. இந்த மாத இறுதியில் மத்தூர் மற்றும் மண்டியா அருகே ஒரு புறவழிச்சாலை திறக்கப்பட உள்ளது” என்றார்.