பாக். நாட்டில் விழுந்த இந்திய ஏவுகணை.. நடந்தது என்ன..? இந்திய பாதுகாப்புத் துறை முக்கிய விளக்கம்.!!

டெல்லி: பாகிஸ்தான் நாட்டில் இந்தியா ராணுவத்திற்குச் சொந்தமான ஏவுகணை விழுந்துள்ளது தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறை முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

உக்ரைன் நாட்டில் தொடங்கி உள்ள போர் 2 வாரங்களைக் கடந்தும் தொடரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எதுவும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தப் போர் இரு நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் உலக நாடுகள் மற்ற நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளை உற்றுக் கவனித்து வருகின்றன.

இப்படிப்பட்ட சூழலில், இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று நேற்று முன்தினம் பாகிஸ்தான் எல்லையில் விழுந்ததாக அந்நாடு குற்றஞ்சாட்டியுள்ளது. ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் பயணிக்கும் இந்த ஏவுகணை, சுமார் 40 ஆயிரம் அடி உயரத்தில் விடப்பட்டதாகவும் இது பாகிஸ்தான் எல்லைக்குள் சுமார் 124 கிலோமீட்டர் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தான் விமானங்களுக்கும் எல்லையில் வசிக்கும் மக்களுக்கும் கடும் ஆபத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் நல்வாய்ப்பாக எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதில், “கடந்த மார்ச் 9ஆம் தேதி வழக்கமான பராமரிப்பு பணிகளின் போது, ​​தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத் தவறுவதாக ஏவப்பட்டது. இந்த விவகாரத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. இது தொடர்பான உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த ஏவுகணை பாக், நாட்டில் விழுந்துள்ளது. இந்த சம்பவம் ஆழ்ந்த வருந்தத்தக்கது என்றாலும், விபத்தினால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பது நிம்மதியான விஷயம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஏனென்றால், ராணுவ ஏவுகணையை ஏவுவது எளிதான காரியம் இல்லை. அதற்குத் தயாரிப்பு செயல்முறை, இலக்கை அடையாளம் காண்பது எனப் பல கட்ட செயல்முறைகள் உள்ளன. இவை எல்லாம் முடித்த பின்னரே தாக்குதலை நடத்த முடியும். எனவே, இந்த சம்பவம் எப்படி நடந்திருக்கும் என்பது ராணுவ நிபுணர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

முன்னதாக இந்தச் சம்பவம் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியா தூதர்களை அழைத்து பாக். அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. இந்தச் சம்பவம் மிக மோசமான விமான விபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று பாக். அரசு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. கடந்த மார்ச் 9ஆம் தேதி பாக். நேரப்படி மாலை 6:43 மணிக்கு இந்தியாவின் சூரத்கர் என்ற இடத்தில் இருந்து சூப்பர்-சோனிக் ஏவுகணை தனது வான்வெளியில் நுழைந்ததாக பாக். தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே பாக். நாட்டில் விழுந்த ஏவுகணை பிரமோஸ் ஏவுகணை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பிரமோஸ் ஏவுகணை என்பது இந்தியாவின் DRDO எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பும், ரஷ்யாவும் இணைந்து உருவாக்கிய ஏவுகணையாகும். இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை இரண்டிலும் பிரமோஸ் ஏவுகணை உள்ளது. இந்தியா விமானப்படையில் உள்ள Su 30 MKI விமானத்தில் இருந்து இந்த ஏவுகணையை ஏவலாம். அதேபோல தரையில் இருந்தும் ஏவலாம். பாக். தரப்பில் ஹரியானாவின் சிர்சா பகுதியில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு பிரமோஸ் ஏவுகணை தளம் இல்லை என்பதால் விமானத்தில் இருந்தே ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகிறது.