ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அவனியாபுரம் வாடிவாசல்… பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கும் பணி தீவிரம் மும்முரம்..!

துரை: மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான வாடிவாசல், பார்வையாளர்கள் அமரும் இடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்கும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வரும் 15-ம் தேதி நடக்கிறது. இந்தப் போட்டியை நடத்துவதில் மாவட்ட நிர்வாகத்துக்கும், ஜல்லிக்கட்டுக் குழு நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம் கூறும் ஆலோசனைகளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக் குழு ஒத்துக்கொள்ள மறுப்பதால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் மாவட்ட நிர்வாகமே ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த முடிவெடுத்துள்ளது. அதனால்,அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்டம் நிர்வாகம் முடுக்கிவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்படுகின்றன. போட்டியைக் கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்தப்படுகிறது. காளைகள் அவிழ்த்துவிடப்படும் வாடிவாசல், அதன்பின்புறம் காளைகளை வரிசையாக நிறுத்துவதற்கு இரட்டைத் தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகின்றன.

பார்வையாளர்கள் அமரும் இடம்,அவசர வழி, மருத்துவ முகாம்கள், குடிநீர் வசதிகள் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், காவல்துறை துணை ஆணையர் சாய் பிரனித் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வாடிவாசலில் அவிழ்த்துவிடப் படும் காளைகள், கடைசியில் போய் சேரும் மைய (கலெக்சன் சென்டர்) பணிகளையும், காளைகளுக்கான தீவனம், தண்ணீர் வைக்கும் இடங்களையும் பார்வையிட்டனர். பணிகளைப் பாதுகாப்பாகவும், விரைந்து முடிக்கவும் மேயர், ஆணையர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 650 முதல் 800 காளைகள் பங்கேற்க மாவட்ட நிர்வாகம் டோக்கன் வழங்க முடிவெடுத்துள்ளது. ஆனாலும், போட்டி நடக்கும் நாளில் வாடிவாசலுக்கு பின், காளையை அவிழ்த்துவிடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவர்கள் மருத்துவப் பரிசோதனை செய்வார்கள்.

அதில், உடல் தகுதியுடன் இருந்தால் மட்டுமே காளைகளை அவிழ்த்துவிட கால்நடை மருத்து வர்கள் அனுமதிப்பார்கள். அத னால், போட்டியில் எத்தனை காளைகள் பங்கேற்கும் என்பதை தற்போதே உறுதியாகக் கூற முடியாது என கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்தனர்.