காஷ்மீரில் ‘ஜி – 20’ உச்சி மாநாடு… சீனா கடும் எதிர்ப்பு… இதில் எந்த மாற்றமும் கிடையாது-இந்தியா உறுதி ..!!

பீஜிங்:அடுத்த ஆண்டு ஜம்மு – காஷ்மீரில் ‘ஜி – 20’ மாநாடு நடத்த, சீனா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட, 20 நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு, ஆண்டுதோறும் கூடி சர்வதேச விவகாரங்கள், பொருளாதார வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கும். இந்தாண்டு ‘ஜி – 20’ மாநாடு, இந்தோனேஷியாவின் பாலி தீவில், நவ.,15ல் துவங்க உள்ளது. ‘அடுத்த ஆண்டு, இந்தியா தலைமையில் ஜி – 20 மாநாடு, ஜம்மு – காஷ்மீரில் நடக்கும்’ என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்ய, உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காஷ்மீரில் இந்த மாநாட்டை நடத்த, ஜி – 20 கூட்டமைப்பில் இடம் பெறாத பாக்., எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

‘காஷ்மீர் பிரச்னைக்கு இன்னும் தீர்வு காணாத நிலையில் அங்கு மாநாடு நடத்தக் கூடாது; ஜி – 20 நாடுகள் இதை எதிர்க்க வேண்டும்’ என பாக்., கூறியுள்ளது. இதற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.இது பற்றி, சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவே லிஜியன் கூறியதாவது:இந்தியா – பாக்., இடையே பல ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்னை உள்ளது. இப்பிரச்னைக்கு, ஐ.நா., தீர்மானத்தின் படி தீர்வு காண வேண்டும் என்பதில் சீனாவுக்கு மாற்றுக் கருத்து இல்லை. இந்த சூழலில், காஷ்மீரில் ஜி – 20 மாநாட்டை நடத்துவது பிரச்னையை மேலும் தீவிரமாக்கும்.

இந்த பிரச்னையை பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படுத்தப்படும் சீனா – பாக்., பொருளாதார வழித் தட திட்டத்துடன் ஒப்பிடக் கூடாது. பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக சீன நிறுவனங்கள் அங்கு சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. எனினும், இதன் காரணமாக காஷ்மீர் விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது. அது, இந்தியா – பாக்., பேசித் தீர்க்க வேண்டிய பிரச்னை.இவ்வாறு அவர் கூறினார்.