அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி… ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு- பாதுகாப்பு அதிகரிப்பு..!

துரையில் நடைபெறும் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து நடைபெற உள்ளது.

தை முதல் நாளான ஜனவரி 15 தேதி தொடங்கி 16, 17 ஆகிய மூன்று நாட்கள் இப்போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்காக தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சில விதிமுறைகளை கொண்டுவந்துள்ளது.

அதன்படி இந்த மூன்று ஜல்லிகட்டு போட்டிகளில் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டுமே மாடுபுடி வீரர்கள் மற்றும் காளைகள் பங்கேற்க முடியும் எனவும், போட்டியில் பங்கேற்பதற்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திருக்க வேண்டும் எனவும், போட்டியில் பங்கேற்பதற்கு 2 நாட்களுக்கு முன்னரே கொரோனா இல்லை என RTPCR மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற்று, அச்சான்றிதழுடன் போட்டிக்கு வருகை தந்தால் மட்டுமே போட்டியாளர்கள் போட்டியில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

இதனால் அவனியாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது ஏராளமான ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டு உரிமையாளர்கள், உதவியாளர்கள் RTPCR பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல் மற்ற பகுதிகளில் உள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களும் உதவியாளர்களும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை 8 மணி முதல் பகல் 3 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளை சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளை அடைக்க மதுரை ஆட்சியர் அனீஷ்சேகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் போட்டி நாளன்று போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள 14 மதுபானகடைகள் மற்றும் 2 டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக அவனியாபுரத்தில் 4 கடைகளும், வில்லாபுரத்தில் 3 மதுக்கடைகளும், ஒரு டாஸ்காக் கடையும் அடைக்கப்படுகிறது. இதேபோல மேலஅனுப்பானடி, சிந்தாமணி, முத்துப்பட்டியில் 1 கடையும், அதேபோல அலங்காநல்லூரை ஒட்டியுள்ள பொதும்பு பகுதியில் 2 கடைகளும், சிக்கந்தர் சாவடி, பூதகுடி, பாலமேட்டில் 1 டாஸ்காக் கடையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டி போட்டிக்கு அமைச்சர்கள் வருகை தரவுள்ளதாக வெளியான தகவலையடுத்து அந்த பகுதிகளில் சட்ட ஒழுங்கு பாதுகாப்பிற்காக மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.