மோட்டார் சைக்கிள் டாக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு.!!

மோட்டார் சைக்கிள் டாக்சியை தடை செய்யக்கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
கோவையில் 15 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இதனை நம்பி 15,000 குடும்பத்தினர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சமீபகாலமாக தனியார் மோட்டார் சைக்கிள் டாக்ஸி இயங்கி வருகின்றன. இதன் மூலம் பயணிகளை வாடகைக்கு அழைத்து சென்று வருகின்றனர். இதனால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், உக்கடம் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் சில இடங்களில் மோட்டார் சைக்கிள் மூலம் பயணிகளை ஏற்றுகின்றனர். இதனால் எங்களுக்கும், அவர்களுக்குமிடையே சில நேரங்களில் வாக்குவாதம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே எங்களது வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க மோட்டார் சைக்கிள் டாக்ஸியை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.