தொடரும் போர்… உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் -பாதுகாப்பு கருதி அவசர முடிவு.!!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்நாட்டிற்குள் புகுந்து ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த சண்டை, 18-வது நாளாக ஞாயிற்றுக்கிழமை அன்றும் (நேற்று) நீடித்தது. மரியுபோலில் நடத்தப்பட்ட தாக்குதலால், அங்குள்ள உணவுப்பொருட்கள் சேமிப்புக் கிடங்கு முழுமையாக சேதமடைந்தது. விசில்கிவ் நகரில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைனின் ஆயுதக்கிடங்கு தரைமட்டமானது.

உக்ரைனின் லிவிவ் நகரில் உள்ள ராணுவப் படைத் தளத்தின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 35 பேர் உயிரிழந்தனர். 57 பேர் படுகாயமடைந்துள்ளனர். மெலிடோபோல் நகர மேயரை ரஷ்யப் படைகள் ஏற்கனவே கைதுசெய்த நிலையில், நிப்ரோருட்னே நகர மேயரை தற்போது கைதுசெய்துள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனுக்குள் படையெடுத்துள்ள ரஷ்யப் படையினர் பயங்கரவாதிகளாக மாறிவிட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரைனின் மீதான தாக்குதலை அனைத்து நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் தடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

கீவ் நகருக்கு வடகிழக்கே பீரிமோஹா என்ற கிராமத்தில் ரஷ்யப் படைகள் குண்டு வீசியதில் 7 பேர் உயிரிழந்தனர். உக்ரைனில் இருந்து வெளியேறும் மக்களுக்கான மனிதாபிமான வழித்தடத்தை அமைக்க ரஷ்யா தடைகளை ஏற்படுத்தி வருவதாகவும், உக்ரைனிய அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். உக்ரைனில் இருந்து போலந்துக்கு ரயில்கள் மூலம் சென்றவர்களுக்கு மனிதாபிமான உதவிகளை தன்னார்வலர்கள் அளித்தனர்.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் இதுவரை 25 ஆம்புலன்ஸ்கள் சேதமடைந்துள்ளன, 3 ஆயிரத்து 687 உக்ரைன் ராணுவ நிலைகளை ரஷ்யா அழித்துள்ளதாகவும், 1,300 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 579 உக்ரைன் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அண்மையில் ரஷ்ய தாக்குதலுக்கு உள்ளான ஜபோரிஜியா அணு உலையை ரஷ்யா கட்டுப்படுத்துவதாக புகார் எழுந்துள்ள நிலையில் அதை ரஷ்யா மறுத்துள்ளது. உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள ராணுவ நிலைகளை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளதாகவும் பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உக்ரைனின் மேற்குப் பகுதியில் தாக்குதல் நடத்தப்படுவதாகவும், நிலைமை வேகமாக மோசமடைந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை தற்காலிகமாக போலந்துக்கு மாற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை மீண்டும் ஆய்வுசெய்து அதற்கேற்ப முடிவுசெய்யப்படும் என்றும் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

உக்ரைன் – ரஷ்யா போரால் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும், இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. உக்ரைன் சூழல் குறித்தும், அங்கு சிக்கியிருந்த இந்தியர்கள் மற்றும் அண்டை நாட்டவர்களை மீட்கும் பணியின் தற்போதைய நிலை குறித்தும் பிரதமரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது, கார்கிவ் நகரில் உயிரிழந்த கர்நாடக மாணவர் நவீன் சேகரப்பாவின் உடலை தாயகம் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.