ஆடி அமாவாசை – கோவை பேரூர் படித்துறையில் கூடிய மக்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிக கட்டணம் வசூலித்த பேரூராட்சி பக்தர்கள் அதிருப்தி !
ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பேரிடர் மற்றும் நொய்யலில் நீர் வரத்து இல்லாததால், பெரிய அளவில் கூட்டம் காணப்படாத நிலையில், நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு காலை முதல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் மூதாதையர்களுக்கு தற்பணம் செய்தனர். கடந்த 10 நாட்களாக மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரை தொட்டவாறு தண்ணீர் செல்வதால் ஆற்றில் இறங்கி திதி கொடுத்து வருகின்றனர். வழக்கத்தை விட அதிகளவு கூட்டம் உள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஆடி அமாவாசை கூட்டம் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் பேரூர் பிரிவில் இருந்து புட்டுவிக்கி சாலை வழியாக செல்வபுரம் பகுதிக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் பேரூர் பேரூராட்சி சார்பில் விழாக் கால சிறப்பு வாகன நிறுத்தக் கட்டணம் என அதிக கட்டணமாக நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 30 வரை வசூல் செய்தது பக்தர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply