போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் ஜெம் வீரமணியிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அவரது சொகுசு பங்களாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 7 முதல் 16 வயது வரையிலான சிறுமிகள் தொடர்பான இந்த வழக்கில், விசாரணை தீவிரமடைந்துள்ளது.
விசாரணையின்போது வீரமணியின் பங்களாவில் இருந்து பல்வேறு முக்கிய ஆதாரங்கள் கிடைத்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன. அவற்றின் உண்மைத் தன்மை உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதனிடையே, சிறுமிகளை பயன்படுத்தி வீரமணியை மிரட்டி, அவரிடம் இருந்து பெருந்தொகையை பணமாகப் பெற்றதாக சாந்தி, கணேசன் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வகையில் பணப்பறிப்பு நடைபெற்றதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
வழக்கு தொடர்பாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், சம்பவங்களின் பின்னணி மற்றும் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். POCSO வழக்கு தொடர்பான ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களை ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.









