அடேங்கப்பா!! அலங்காரத்துடன் சென்ற 120 கார்… 250 அதிகாரிகள்… சத்தமில்லாமல் அலேக்காக மொத்தமா தூக்கிய பிரம்மாண்ட ரெய்டு… மிரண்டு போன பிரபல தொழிலதிபர்கள்..!!

மும்பை: மகாராஷ்டிராவையே மிரளச் செய்யும் வகையில் நேற்று நடைபெற்ற ரெய்டு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

வருமான வரித்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் ரெய்டுகள் அனைத்தும் மிக ரகசியமாக மேற்கொள்ளப்படும். சிறிய தகவல் லீக்கானாலும் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகிவிடும் என்பதாலே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

அதையும் தாண்டி சில சமயங்களில் ரெய்டு குறித்த தகவல்கள் முன் கூட்டிய சம்மந்தப்பட்ட நபர்களுக்குத் தெரிந்துவிடும். இதனால் ரெய்டு போனாலும் பெரியளவில் ஒன்றுமே கிடைக்காது.

இந்தச் சூழலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் யாருக்கும் தெரியாமல் ரெய்டு நடத்த வேண்டும் என்பதற்காக வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை வியக்கச் செய்வதாக அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி அவர்கள் தனித்தனியாக 120 வாகனங்களில் கிளம்பி உள்ளனர். ஒரே நேரத்தில் இத்தனை வாகனங்கள் கிளம்பினால் சந்தேகம் வரும் என்பதால் இப்படி தனித்தனியாகக் கிளம்பி உள்ளனர்.

மேலும், அதில் பல வாகனங்களில் எதோ திருமணத்திற்குச் செல்வதைப் போல அலங்கரித்து உள்ளனர். அந்த கார்களில் “ராகுல் அஞ்சலி திருமணம்” என்று போஸ்டர்கள் கூட வைத்து இருந்தனர். இந்த சிறிய கார்களின் அணிவகுப்பைப் பார்த்த அனைவரும் முதலில் இதைத் திருமண அணிவகுப்பு என்றே நினைத்து இருக்கக் கூடும். ஆனால், உண்மையில் அவர்கள் சென்றது திருமணத்திற்கு இல்லை. ரெய்டிற்கு!

இந்த பிரம்மாண்டமான ரெய்டில் சுமார் 250 வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அவர்கள் அனைவருமே இப்படி திருமணத்திற்கு செல்வதை போலவே மேக்அப் போட்டுக் கொண்டு பயணித்துள்ளனர். வரி செலுத்தாமல் ஏமாற்றிய இரு முக்கிய ஸ்டீல் நிறுவன தொழிலதிபர்களைக் குறி வைத்தே இந்த ரெய்டு நடத்தப்பட்டது. ஜல்னா, அவுரங்காபாத், நாசிக் மற்றும் மும்பை என மொத்தம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு உள்ளன.

வருமானவரித் துறையினர் போட்ட இந்த விரிவான திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்தது. இந்த அதிரடி ரெய்டை தொழிலதிபர்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த அதிரடி ரெய்டில் மொத்தம் ரூ. 390 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ண அருகே இருந்த எஸ்பிஐ வங்கியின் உதவியைக் கோரி உள்ளனர். அவர்கள் வந்தும் கூட பணத்தை எண்ணி முடிக்க சுமார் 11 மணி நேரம் ஆகி உள்ளது.

இந்த அதிரடி ரெய்டில் ரூ 56 கோடி ரொக்கம், 32 கிலோ தங்கம் மற்றும் ₹ 14 கோடி மதிப்புள்ள வைரங்கள் மற்றும் பிற சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அந்த இரு தொழிலதிபர்களும் வருமானத்தை மறைத்த சுமார் 120 கோடி வரி செலுத்தாமல் ஏமாற்றி உள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.