உலக காது கேட்கும் நாள் ஆண்டுதோறும் மார்ச் 3ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு, ‘வாழ்நாள் முழுவதும் கேட்க கவனமுடன் கேளுங்கள்’ என்ற கருப்பொருளை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், காது கேட்கும் திறன் குறைபாடுடன் வரும் நோயாளிகளுக்கு, முறையான பரிசோதனையுடன், தேவையான அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மேலும், கேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு காதொலி கருவிகளும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், இதுவரை 236 குழந்தைகளுக்கு காக்ளியர் இம்ப்ளாண்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவக்கல்லுாரியின், காது மூக்கு தொண்டை பிரிவு சார்பில் உலக காது கேட்கும் நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. மருத்துவமனை டீன் நிர்மலா தலைமையில், நடந்த இந்நிகழ்ச்சியில், காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். இதில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, வரும் 5, 6 ஆகிய தேதிகளில், காது மூக்கு தொண்டை பிரிவில் முதுநிலைப் பயிற்சி மாணவா்களுக்கான சிறப்பு நேரடி காது அறுவை சிகிச்சை பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில், தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் இருந்து சுமார் 50 மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.