திருப்பூரில் கடந்த திங்கள்கிழமை காலை தாராபுரம் சாலை புதுநகர் பகுதியில் சூட்கேசில் பெண் சடலம் இருந்த வழக்கில் கொலை செய்த அபிஜித் மற்றும் அவருக்கு உதவிய ஜெய்லால் ஆகிய இரு நபர்களை பிடிக்க திருப்பூரிலிருந்து இரண்டு தனிப்படைகள் ஓசூர் மற்றும் கர்நாடகாவில் முகாமிட்டுள்ளனர்.
கடந்த 7 ஆம் தேதி காலை திருப்பூர், தாராபுரம் ரோட்டில், புதுநகர் பகுதியில் கால்வாயில் கேட்பாரற்று சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் சொன்னதும் சூட்கேஸை சோதனை செய்ததில், அதில் பெண் சடலம் அடைபட்டு கிடந்தது. உடனடியாக உடலை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் யார்? கொலை செய்யப்பட்ட பெண் யார்? என்பன போன்ற விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை செய்ததில் இருசக்கர வாகனத்தில் இரண்டு நபர்கள் பெண் சடலத்துடன் கூடிய சூட்கேஸை கொண்டு வந்தது தெரிய வந்தது. இந்நிலையில் நேற்று அந்த பெண் குடியிருந்த வீட்டை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். உயிரிழந்த பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் அவரின் பெயர் நேகா என்பதும் தெரியவந்தது. அப்பெண் அபிஜித் என்ற நபரோடு கடந்த ஒரு மாதமாக தான் திருப்பூர் வந்து வெள்ளியங்காடு கே.எம்.ஜி பகுதியில் வீடு எடுத்து குடியிருந்தது தெரியவந்துள்ளது. சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்ணுடன் தங்கிருந்த அபிஜித் வீட்டின் உரிமையாளரிடம் தான் வீட்டை காலி செய்வதாக கூறி பொருட்களை எடுத்துசென்றுள்ளார். அப்போதுதான் யாருக்கும் சந்தேகம் வராதபடி கொலையான பெண்ணை சூட்கேஸில் வைத்து கொண்டு சென்று புதுநகர் பகுதியில் கால்வாயில் வீசியுள்ளனர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். அபிஜித் மற்றும் ஜெய்லால் ஆகியோரின் தொலைபேசியை பின்தொடர்ந்ததில் அவர்கள் தமிழக கர்நாடக எல்லையில் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கொலையில் சம்பந்தப்பட்டுள்ள அபிஜித் மற்றும் ஜெய்லால் என இருவரும் தலைமறைவாக இருக்ககூடும் என காவல்துறையால் சந்தேகிக்கப்படும் ஒசூர் மற்றும் கர்நாடாகவிற்கு திருப்பூரில் இருந்து 2 தனிப்படையினர் சென்று முகாமிட்டுள்ளனர்.
Leave a Reply