சென்னை : ‘ஆதிசங்கரர் சிலை திறப்பு விழாவில் பிரதமர் மோடியின் உரையை, தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதை அரசியலாக கருத முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவில் வளாகத்தில், மதம் மற்றும் மரபு சாராத நிகழ்வுகளை நடத்த அனுமதி அளிக்கக் கூடாது; வளாகத்தில் அரசியல், அரசு மற்றும் தனியார் கூட்டங்களுக்கு தடை விதிக்கக் கோரி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் மனு தாக்கல் செய்தார். இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என். பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, ‘முதல் பெஞ்ச்’ முன், விசாரணைக்கு வந்தது.பிரதமர் மோடி, கேதர்நாத்தில் ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்து நடத்திய உரை, தமிழகத்தில் 16 கோவில்களில் ஒளிபரப்பபட்டதாகவும், காஞ்சிபுரம் கோவிலில், தொல்லியல் துறை சாதனைகளை காட்சிப்படுத்தியதாகவும், மனுதாரர் தரப்பில் சுட்டிக் காட்டப்பட்டது.அரசு சார்பில், அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ”மத்திய அரசு அனுப்பிய தகவலின் அடிப்படையில் பிரதமர் உரை ஒளிபரப்பப்பட்டது. அது, அரசியல் நிகழ்வு அல்ல; மதம் சார்ந்த நிகழ்வு. ”தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை அந்த துறை கவனிக்கிறது.
அறநிலையத்துறை எந்த விதிகளையும் மீறவில்லை,” என்றார். இதையடுத்து, ‘பிரதமரின் முழு உரையையும் பார்த்தால், மதம் மற்றும் ஆதிசங்கரரின் பங்களிப்பு பற்றி தான் உள்ளது என்பதால், அதை அரசியலாக கருத முடியாது. ‘ தொல்லியல் துறையின் புகைப்படங்களை கோவிலில் காட்சிப்படுத்தியதையும் தவறாக கருத முடியாது’ என்றும் முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான மனுவையும், முதல் பெஞ்ச் தள்ளுபடி செய்தது.வளாகத்தில் பிரசாதம்கோவில் வளாகத்தில் உணவு பண்டங்கள் விற்க தடை விதிக்கவும், வாகனங்களுக்கு தடை விதிக்கவும் கோரிய மனுக்களும், முதல் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தன. வளாகத்தில், கோவில் பிரசாதம் தவிர்த்து, வேறு எந்த உணவுப் பொருட்களும் விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், வாகனங்களை உள்ளே அனுமதிப்பதாக கூறுவதற்கு ஆதாரங்கள், புகைப்படங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
Leave a Reply