கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் அருகே கடந்த 1-ந் தேதி பதுவம்பள்ளியை சேர்ந்த முகுந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் தனது 4 நண்பர்களுடன் நடந்து சென்றார்.
அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுபாஷ் (22) என்பவர் அவர்கள் மீது உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதை முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிகேட்டனர். இதனால் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுபாஷை தாக்கினர். இதனால் கோபத்தில் இருந்த சுபாஷ் மறுநாள் தனது நண்பர்களுடன் முகுந்த ராஜேஷ் தங்கி இருந்த அறைக்கு சென்றார். அங்கு தூங்கி கொண்டிருந்த முகுந்த ராஜேஷை அடித்து உதைத்து சென்றனர். இதில் முகுந்த ராஜேசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
பின்னர் முகுந்த ராஜேஷ் தனது நண்பர்களிடம் தலை சுற்றுவதாக கூறியுள்ளார். அவர்கள் முகுந்த ராஜேசின் பெற்றோருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று முகுந்த ராஜேஷுக்கு சிகிச்சை அளித்தனர்.
அதன்பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுகுறித்து முகுந்த ராஜேசின் தந்தை ராசு கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முகுந்தராஜேஷ் மேல் சிகிச்சைக்காக கடந்த 16-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சுபாசை கருமத்தம்பட்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவரது நண்பர்களை தேடி வருகின்றனர்.
Leave a Reply