சீனாவை அச்சுறுத்தும் மேலும் ஒரு புதிய வகை வைரஸ் ‘லாங்யா’..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையாத நிலையில் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சீனாவில் லாங்யா என்ற புதிய வைரஸ் பதிவாகியுள்ளது.

கிழக்கு சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் தொண்டை சவ்வு பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டது. புதிதாகக் கண்டு பிடிக்கப்பட்ட லாங்யா ஹெனிப வைரஸ், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வந்திருக்கலாம் சீன மருத்து ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், சோர்வு, இருமல், பசியின்மை, மயால்ஜியா, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகளும் இருப்பதாகவும் ஆய்வில் பங்கேற்ற விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டினர். மேலும் இதற்கு தடுப்பூசியோ சிகிச்சையோ இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

எனினும் லாங்யா ஹெனிபாவைரஸ் பாதிப்புகள் இதுவரை ஆபத்தானவை அல்லது மிகவும் தீவிரமானவை அல்ல, எனவே பீதி தேவையில்லை என்று ஆய்வில் ஈடுபட்டுள்ள டியூக்-என்யுஎஸ் மருத்துவப் பள்ளியின் வளர்ந்து வரும் தொற்று நோய்கள் திட்டத்தின் பேராசிரியர் வாங் லின்ஃபா கூறினார்.