திருக்கழுகுன்றம்: தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி.
அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
திருக்கழுகுன்றம் அடுத்த தேசுமுகிப்பேட்டையில் உள்ள சிவனடியார் சிவதாமோதரனை, கே.அண்ணாமலை அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
கட்சியினரிடையே பேசிய அண்ணாமலை, தற்போது ஆன்மிகத்தின் மீதான நாட்டம் இளைய தலைமுறையினரிடம் குறைவாக உள்ளது. தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி வரவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஆன்மிக ஆட்சி வேண்டும் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, ஆன்மிகம் என்பது கோயிலில் நித்தியப்பூஜை செய்வது கிடையாது. அது மக்களுக்கான சிந்தனை. சாதி, மதத்தை எல்லாம் தாண்டி மனிதனை மனிதனாகப் பார்ப்பது. இளைய தலைமுறையினர் வாட்ஸ் – அப், பேஸ்புக், யு டியூப், நல்ல உணவு, நல்ல உடை என வாழ்க்கையை தொடர்கின்றனர்.
இளைய தலைமுறையினர் சிவாச்சாரியார்களாகவும், முற்றும் துறந்தவர்களாக வாழ்க்கை பாதையில் பயணிக்க வேண்டும். அதைவிட மிக முக்கியமானது இருப்பவன், தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது.
ஆசை, காமம், குரோதம், பகை போன்ற எதுவும் இல்லாமல் சமநிலையில் அரசியல் செய்யக்கூடிய ஒரு மனிதர் வரும்போது ராமராஜ்ஜியம் பிறக்கும். அதற்காக நாம் அனைவரும் தொடர்ந்து போராட வேண்டும். ஏனென்றால் சமுதாய மாற்றம் வரும்போது, சந்ததியினரிடையே மாற்றம் ஏற்படும்.
நானும் முற்றும் துறந்த மனிதனாக முயற்சி எடுத்து, அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் என்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறேன் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தின் பாதை போதை ஆகிறது, புத்தகப் பைகளைச் சுமந்த கைகள் பொட்டலங்களைச் சுமக்கிறது என்று ஏற்கனவே கூறியிருந்த அண்ணாமலை இளைஞர்கள் ஆன்மீக பாதைக்கு திரும்ப வேண்டும் என்று தற்போது அழைப்பு விடுத்துள்ளார்.