அண்ணாமலையின் புது கட்சி

மூக ஊடக நேரலையில் பேசிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.இந்த அரசியல் இயக்கம் பொறுமையாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.அடுத்து வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப்போவதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.தான் ஏற்கெனவே அங்கம் வகித்த ‘we the leader’ என்கிற இயக்கத்தில் இணையுமாறு அழைத்து விடுத்துள்ளார். அதற்கான இணையதள முகவரியையும் பகிர்ந்துள்ளார். அண்ணாமலை அறிவிப்பை தொடர்ந்து அந்த தளத்தில் இணைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பார்க்க முடிகிறது.

புதிய பாதை, புதிய அரசியல் இயக்கம் ஆரம்பிக்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய ஆசை” எனக் கூறும் அண்ணாமலை, “தமிழக மக்களுக்காக 6 ஆண்டுகள் பணியாற்ற பாஜக வாய்ப்பு கொடுத்தது. இன்று வெளியே வந்திருக்கிறேன். 2009-இல் விஜயகாந்தின் தேமுதிகவில், மூன்று மாதங்கள் மாணவராக இன்டர்ன்ஷிப் செய்தேன். அதன்பின் 2020-இல் பாஜகவில் இணைந்தேன். இன்று புதிய இயக்கத்தை உங்கள் முன் வைக்கிறேன். என்னைப் பற்றி நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு விளக்கம் தர வேண்டும் என்பதற்காக தான் பேசுகிறேன்.” என்றார்.

நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து தனக்கு வந்த அழைப்பு பற்றி குறிப்பிட்டு பேசிய அண்ணாமலை, “பாஜகவில் இணைகிறேன் என்கிற வாக்குறுதியை சந்தோஷிடம் கூறினேன். 2020-இல் பாஜகவில் இணைவதற்கு ஒரு நாளுக்கு முன்பு ரஜினிகாந்த் என்னை அழைத்தார், ஆனால் நான் மறுத்துவிட்டேன்.” என்றார்.

“இந்தியன் என்கிற அடையாளத்தோடு பெருமைமிகு தமிழனாக இருக்கிறேன்.” என கூறிய அவர்,”தமிழ்நாட்டின் வளர்ச்சியை அனைவரும் எடுத்துச் செல்ல வேண்டும். பாஜக தமிழர் அடையாளத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காக தனித்துச் செல்ல வேண்டும் எனக் கூறி வந்தேன்.” என்றார்.

கடந்த டிசம்பர் மாதமே தான் ராஜிநாமா செய்யப்போவதாக கட்சித் தலைமையிடம் தெரிவித்துவிட்டதாகக் கூறும் அண்ணாமலை, “எனக்கு இருந்த கருத்து வேறுபாடுகளை 18 மாதங்களாக கூறி வந்தேன். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதியே பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துவிட்டேன். ” என்றார்.

தமிழ்நாட்டின் ஓர் அரசியல் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம் என அறிவித்த அவர், அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியாக போட்டியிட உள்ளதாக அறிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாட்டிற்கு இன்னொரு அரசியல் கட்சி வேண்டும். இந்த இயக்கத்தில் இணைய விரும்புபவர்கள் இணையதளம் மூலமாக சேரலாம்” என்றார்.

கோவையில் “ஏபிஜே அப்துல் கலாம் பெயரில் ஒரு பயிற்சி மையம் உருவாக்க இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.

பாஜக மற்றும் மோதி பற்றி குறிப்பிடும்போது, “பிரதமர் மோதி மீது மரியாதை உண்டு. மும்மொழிக் கொள்கை போல பாஜகவிடம் முரண்பட வேண்டிய சூழல் எழுந்தால் நிச்சயம் முரண்படுவோம். முறைப்படி ராஜிநாமா செய்ய வேண்டும் என்பதால் தான் அமித் ஷாவை நேரில் சந்தித்தேன்.” என்றார்.

இன்று காலை பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ராஜிநாமாவை ஏற்பதாக பாஜக தலைமை ஒரு செய்திக்குறிப்பின் மூலம் அறிவித்திருக்கிறது.

கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை ராஜிநாமா செய்ததை பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக,சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார்.