சர்பராஸ் கானின் தந்தைக்கு கார் பரிசு… சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா..!!

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இந்தியா – இங்கிலாந்து இடையே ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது.இந்த போட்டியில், நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் அறிமுகமானார். இது மேலும், இந்த போட்டிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது.இந்திய அணியின் இடம் பிடிப்பதற்காக சர்பராஸ்கான் நீண்ட நாட்களாக உழைத்து வந்தார். அவரது கடின உழைப்பிலும், வெற்றியிலிம் அவரது தந்தை நௌஷாத் கானின் பங்கானது யாராலும் மறக்க முடியாது.

சர்பராஸ் கான் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனபோது அவரது தந்தை நௌசாத் கான் மிகவும் உணர்ச்சிப்பட்டு அழுதார். இந் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திர சர்பராஸ் கானின் தந்தையின் கடின உழைப்புக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். மேலும், நௌஷாத் கானை பாராட்டி, அவருக்கு அருமையான பரிசு வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், ‘ ஒரு உத்வேகம் தரும் பெற்றோராக இருந்து, நௌஷாத் கான் என்னிடமிருந்து தார் காரை பரிசாக ஏற்றுக்கொண்டால் அது எனது பாக்கியமாகவும், கௌரவமாகவும் கருதுவேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில், நௌஷாத் கானுக்கு ஆனந்த் மஹிந்திரா தார் காரை பரிசளித்ததை கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். இதற்காக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆனந்த் மஹிந்திராவை பாராட்டி வருகின்றனர்.

சர்பராஸ் கான் இங்கிலாந்து அணிக்கு எதிராக அறிமுகமான முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸ்களிலேயே சிறப்பாக விளையாடி 62 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய சர்பராஸ் கான் 66 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் விளாசினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். அவுட்டானதற்கு பின் சர்பராஸ் கான் பயமின்றி பேட்டிங் செய்ததை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

முதல் தர போட்டிகளில் இதுவரை சிறப்பாக விளையாடியுள்ள சர்பராஸ் கான், முச்சதம் உள்பட 14 சதங்கள் அடித்துள்ளார். இதுவரை 45 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள சர்பராஸ் கான் 14 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் உதவியுடன் 3912 ரன்கள் எடுத்துள்ளார். ஆட்டமிழக்காமல் 301 ரன்கள் எடுத்ததே இவரது சிறந்த ஸ்கோர். இதேபோல், 37 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 629 ரன்களும், 96 டி20 போட்டிகளில் விளையாடி 1188 ரன்கள் எடுத்துள்ளார்.