கடும் போக்குவரத்து நெருக்கடியிலும்… மேட்டுப்பாளையம் சாலையை துரிதமாக கடந்து குழந்தையை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்கள் – குவியும் பாராட்டுக்கள் .!

கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் ஜார்ஜ். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு குழந்தை பிறந்து 30 நாட்கள் ஆகிறது. இக்குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் பூர்ணிமா தனது குழந்தையை மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் குழந்தைக்கு முதுகு தண்டில் நீர் கட்டி இருப்பதாகவும், அத்துடன் ரத்தத்தில் கிருமிகள் பரவியதால் குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து குழந்தையை 2 நர்சுகளுடன் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஆம்புலன்சுடன் உதவிக்கு மேலும் 2 ஆம்புலன்சுகள் அனுப்பி வைக்கப்பட்டன.இதையடுத்து இரவு 10 மணிக்கு இங்கிருந்து புறப்பட்ட ஆம்புலன்சு கடும் போக்குவரத்து நெரிசல்களுக்கு இடையே 30 நிமிடத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை அடைந்தது. கோவை தனியார் ஆஸ்பத்திரியில் மருத்துவ குழுவினர் குழந்தைக்கு அதற்கான சிகிச்சை அளித்து உடனடியாக காப்பாற்றினர். கோவை மேட்டுப்பாளையம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே துரிதமாக ஆம்புலன்சை இயக்கிய டிரைவர்களை, சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.