மலை ரயிலை மறித்து மனு கொடுத்த பழங்குடியின மக்கள் கோரிக்கைக்கு ஒப்புதல் வழங்கிய தெற்கு ரயில்வே பொதுமேலாளா்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து புதிய டீசல் மலை ரயில் என்ஜின் சேவையை தொடங்கி வைத்து அதில் குன்னூா் நோக்கி தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஆர்.என்.சிங், சேலம் கோட்ட ரயில்வே மேலாளா் கௌதம் சீனிவாச ராவ் ஆகியோர் சென்று கொண்டிருந்தனா். கல்லாறு ரயில் நிலையத்துக்கு சுமார்1 கி.மீ. முன்பு ரயில் சென்று கொண்டிருந்த போது ஓடந்துறை ஊராட்சித் தலைவருடன் அகத்தியர் காலணி, கல்லாறு மேலூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பழங்குடியின கிராம மக்கள் ரயில் தண்டவாளத்தில் திரண்டு நின்று கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த தெற்கு ரயில்வே பொது மேலாளார் ஆர்.என்.சிங் உடனடியாக ரயிலை நிறுத்தச் சொல்லிவிட்டு ரயிலில் இருந்து கீழே இறங்கி வந்து அவர்களிடம் பேசினார். அப்போது கிராம மக்கள், கடந்த 45 ஆண்டுகளாக வனப் பகுதியை ஒட்டி 150 குடும்பங்கள் குடியிருந்து வருகிறோம். அவசரத் தேவைக்கு வெளியில் செல்ல வேண்டும் என்றால் தண்டவாளத்தின் மேல் ஏறித்தான் செல்ல வேண்டும். இறந்தவர்களின் உடலையும், உடல் நிலை சரியில்லாதவர்களையும் தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் நிலை உள்ளது. எனவே, இப்பகுதியில் ரயில்வே பாதைக்கு அடியில் சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல முறை ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இப்பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை மனுவை அளித்தனர்.
இதையடுத்து தெற்கு ரயில்வே பொதுமேலாளார் ஆர்.என்.சிங் பேசியதாவது: சமத்துவபுரம் பகுதியில் ரயில் பாலத்துக்கு அடியில் சுரங்கப் பாதை அமைக்க திட்ட மதிப்பீடு செய்யுமாறு ரயில்வே அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். ஓடந்துறை ஊராட்சி நிர்வாகம் அதற்கான நிதியைத் திரட்டி ரயில்வே நிர்வாகத்திடம் வழங்கினால் உடனடியாக சுரங்கப் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதன்பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர் .