மாற்றுத் திறனாளி பெண்ணை கொன்று வீட்டிற்குள் புதைப்பு:வாலிபர் காவல் நிலையத்தில் சரண்..!

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டி அரசுகள்ளர் பள்ளி தெருவில் குடியிருப்பவர் முத்து பேச்சி.

45 வயது உடைய மாற்றுத்திறனாளியான இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு காணவில்லை என தந்தை மாரியப்பன் கூடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

முத்துப்பேச்சி வசித்து வந்த வீட்டின் அருகே வசித்து வந்த போதை பழக்கத்திற்கு அடிமையான மனோஜ் என்பவரின் நடத்தை சந்தேகப்படும்படியாக இருந்ததால், முத்துப்பேச்சியின் உறவினர்கள் இன்று மனோஜின் மீது புகார் அளித்தனர்.

புகாரை விசாரிக்க வந்த போலீஸாருக்கு, பெண் கொலை செய்யப்பட்டு மனோஜ் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் மனோஜின் வீட்டில் சோதனையிட்டபோது, முத்துப்பேச்சி கொலை செய்யப்பட்டு அவரது வீட்டில் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து உத்தமபாளையம் ஏ.எஸ்.பி.ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் விசாரணை செய்து புதைத்த இடத்தை தோண்ட முடிவு செய்து, அங்கேயே பிரேத பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது .

பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளியை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மனோஜ் என்பவர் முத்துப்பேச்சி நான்தான் கொலை செய்ததாக கூறி, கூடலூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.

சரணடைந்த மனோஜ் என்பவரிடம் கொலை மற்றும் கொலை சம்பந்தமான விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவத்தால் குள்ளப்ப கவுண்டம்பட்டி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.