தமிழக காவல் துறையில் பணியாற்றி வரும் 4 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டுடன் நடந்தால் மட்டுமே அம்மாநிலத்தில் ஆட்சி நிர்வாகம் அமைதியான முறையில் நடைபெறும். அமைதி நிர்வாகமே ஒரு மாநலத்தை வளர்ச்சி பாதையை நோக்கி வெற்றி நடை போட வைக்கும். ஒரு மாநிலம் அமைதிப்பூங்காவாக திகழ்வதற்கு முக்கிய காரணமாக இருப்பது காவல்துறை. அந்தக் காவல் துறையில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பெருமை சேர்க்கும் வகையில் வழங்கப்படுவதே பதவி உயர்வு.
ஒரு காவல்துறையில் உச்சகட்ட மரியாதை ஐபிஎஸ் அதிகாரியாவதுதான். ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உச்சகட்ட பெருமை சேர்ப்பது அவர்கள் அம்மாநிலத்தின் காவல் இயக்குனராவதே, அல்லது மாநில தலைநகரின் காவல் ஆணையர் ஆவதே ஆகும். அதிலும் வாழ்நாளில் ஒருமுறையாவது சட்டம் ஒழுங்கு டிஜிபி அல்லது மாநகர காவல் ஆணையராகிவிட வேண்டும் என்பதே ஐபிஎஸ் அதிகாரிகளின் கனவாக இருக்கும். அதிலும் ஒருநாளாவது சட்டம் ஒழுங்கு டிஜிபி இருக்கையில் அமர்ந்து விடவேண்டும் என்பது ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரிகளின் கனவாகும்.
சீனியாரிட்டி அடிப்படையில் இந்த பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்றாலும், ஆட்சியில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த பதவி உயர்வு , பதவி நீட்டிப்பு வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் தற்போது தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் 4 டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் தற்போது வகிக்கும் அதே பதவியில் நீடிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியெனில் அவர்களுக்கு டிஜிபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது என்றே கூறலாம். இதன்மூலம் தமிழக காவல்துறையில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. தமிழக காவல்துறை சைபர் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரியான அம்ரீஷ் புஜாரி டிஜிபியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து சைபர் பிரிவு டிஜிபியாகவே அவர் பணி தொடருவார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதைபோல, தாம்பரம் காவல் ஆணையராக உள்ள கூடுதல் டிஜிபியான ரவி டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தாம்பரம் காவல் ஆணையராகவே பணியை தொடர உள்ளார் என்றும் ஏடிஜிபி அந்தஸ்தில் காவல் ஆணையர் பொறுப்பில் செயல்பட்டு வருகிறார், அதனை உயர்த்தி டிஜிபியாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது. இதேபோல் தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபியான இருந்து வரும் ஜெயந்த் முரளிக்கு டிஜிபியாக பதவி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக பணி தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கான அந்தஸ்தும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதைபோல கருணாசாகர் மத்திய அரசு பணியான காவல்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்துதல் பிரிவு ஏடிஜிபியாக பணியாற்றி வருகிறார். தற்போது டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். மத்திய அரசு பணியை தொடர உள்ளார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது 1991-ம் ஆண்டில் பணிக்கு சேர்ந்த இந்த 4 ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளதால் தமிழக காவல்துறையில் டிஜிபிக்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply