வேளாண் பட்ஜெட்… வெறும் கானல் நீர்… மக்களுக்கு பயன் தராது – பழனிசாமி விமர்சனம்.!!

சென்னை: தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் உள்ளன.

மக்கள் சார்ந்த திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை.

திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி பற்றாக்குறை கொண்ட பட்ஜெட் ஆகவே தாக்கல் செய்யப்படுகிறது 2024-25 நிதியாண்டில் ரூ.3 லட்சத்து 58 ஆயிரம் கோடி பற்றாக்குறையோடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் கடன் தொகையை ரூ.8 லட்சம் கோடி அளவுக்கு திமுக அரசு உயர்த்தியுள்ளது. இந்தியாவிலேயே கடன் வாங்கும் மாநிலத்தில் முதல் மாநிலம் தமிழகம்தான். கடன் மேலாண்மையை சரி செய்வதற்காக அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் பலனில்லை.

தேன் கூடும், கஞ்சனின் கருவூலமும் ஒன்றுதான். அவை இரண்டும், அவற்றை நிரப்பிட உழைத்தவனுக்கு பலன் தராது. அந்த வகையில் இந்த ஆட்சியின் பட்ஜெட் உள்ளது. இது கானல் நீர், மக்களுக்கு பயன் தராது.