காருக்குள் நடிகை பாலியல் வன்கொடுமை வீடியோ விவகாரம் .. மீண்டும் கைதாகிறாரா நடிகர் திலீப்..?

திருவனந்தபுரம் : நடிகை பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்கும் சிறப்பு விசாரணைக் குழு முன்பு மலையாள நடிகர் திலீப் தொடர்ந்து இரண்டாவது நாளாக விசாரணைக்கு ஆஜரானார்.

கேரள மாநிலம் திருச்சூரில் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்குத் திரும்பிய போது கேரளாவைச் சேர்ந்த பிரபல நடிகை ஒருவர் ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

இந்த கொடூர சம்பவம் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகை தரப்பில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி உட்பட 6 பேர் கைதாகினர். மேலும் நடிகைக்கு பாலியல் வன்கொடுமை கொடுக்கப்பட்டபோது உடந்தையாக இருந்ததாக நடிகையின் கார் ஓட்டுநர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

பாதிக்கப்பட்ட நடிகை , கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் அடையாளம் காட்டினார். இந்த வழக்கில் நடிகர் திலீப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது . இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றம் மூலம் ஜாமீன் பெற்று அவர் விடுதலையான நிலையில் இந்த வழக்கு விசாரணை கொச்சியில் பெண் நீதிபதி தலைமையிலான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை தொடர்ந்த வழக்கில் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் முடிக்குமாறு விசாரணைக் குழுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 2017ஆம் ஆண்டு நடைபெற்ற வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து நடிகர் திலீப் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது. அவர் ஆஜராவாரா அல்லது ஏதேனும் காரணம் சொல்லி இழுத்தடிப்பரா என சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக நீதிபதியின் உத்தரவுப்படி நடிகர் திலீப் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். ஆலுவா போலீஸ் கிளப்பில் குற்றப்பிரிவு ஏடிஜிபி எஸ் ஸ்ரீஜித் முன்னிலையில் விசாரணை நடந்த நிலையில் நேற்று சுமார் ஏழு மணி நேரம் விசாரணை நடந்தது. இன்றும் அவர் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் கூறிய நிலையில், இன்றும் நடிகர் திலீப் ஆஜரானார். அவரிடம் நடிகை அளித்த புகார், அவரது செல்போனிலிருந்து திரட்டப்பட்ட ஆதாரங்கள் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டது. விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வர இருப்பதாக கேரள காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.