திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 35). ஜே.சி.பி. டிரைவர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பாண்டிக்கு அதே பகுதியை சேர்ந்த திருமணமான சவுடேஸ்வரி (வயது 30) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளக்காதல் விவகாரம் சவுடேஸ்வரியின் வீட்டுக்கு தெரிய வரவே அங்கு தகராறு ஏற்பட்டது. இது குறித்து சவுடேஸ்வரி முத்துப்பாண்டியிடம் தெரிவித்தார். கடந்த 10 மாதங்களுக்கு முன்பு 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி நெகமத்துக்கு வந்தனர்.
பின்னர் 2 பேரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தனர். முத்துப்பாண்டி காக்கடவில் உள்ள கயிறு மில்லில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இதற்காக 2 பேரும் மில்லில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தனர். சம்பவத்தன்று மில் உரிமையாளர் முத்துப்பாண்டிக்கு தொடர்பு கொண்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து அவர் குடியிருப்புக்கு சென்று பார்த்த போது சவுடேஸ்வரி தூக்கில் பிணமாக தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சவுடேஸ்வரி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது குழந்தைகள் மற்றும் கணவரை தவிக்க விட்டு ஓடி வந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த படி முத்துப்பாண்டி வாழ்க்கையை கொடுக்கவில்லை. இதனால் அவரது கள்ளக்காதல் 10 மாத்தில் கசந்தது. இதன் காரணமாக சவுடேஸ்வரி தனது வீட்டிற்கும் செல்ல முடியாமல், இங்கும் வாழ பிடிக்காமல் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். இதனால் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.