கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பவானி ஆறு உள்ளது. இந்த ஆற்றில்
குளிப்பதற்காகவும், சுற்றி பார்ப்பதற்காகவும் ஏராளாமனவர்கள் அங்கு வருவது
வழக்கம்.
கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக பில்லூர் அணை
நிரம்பியது. அணையில் இருந்து வினாடிக்கு 17 ஆயிரம் கன அடி தண்ணீர்
திறந்து விடப்பட்டிருந்தது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் சென்றது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர் தனது காதலியுடன்
நேற்று காலை விளாமரத்தூர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார்.
பின்னர் அங்கு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, பவானி
ஆற்றுப்பகுதிக்கு சென்றனர். ஆற்றின் ஓரம் அமர்ந்து தண்ணீரை பார்த்து ரசித்தபடி பேசி கொண்டிருந்தனர். அந்த சமயம் பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் காதல் ஜோடியினர் 2 பேரும் சிக்கி கொண்டனர். பின்னர்
காப்பாற்றுங்கள். காப்பாற்றுங்கள் என அவர்கள் சத்தம் போட்டனர். அவர்களது
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவர்களை மீட்கும் முயற்சியில்
இறங்கினர். மேலும் சம்பவம் குறித்து, மேட்டுப்பாளையம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.
உடனடியாக மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன்,
சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், தீயணைப்பு நிலைய அதிகாரி பாலசுந்தரம்
தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கயிறு கட்டி ஆற்றில் இறங்கி காதல் ஜோடியினரை மீட்கும்
முயற்சியில் இறங்கினர். 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு காதல் ஜோடியினரை
மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அதன்பின்னர் காதல் ஜோடியினருக்கு,
போலீசார் அறிவுரை வழங்கி எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த
சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.