காரை காலால் எட்டி உதைத்த காட்டு யானை-திம்பம் மலைப்பாதையில் திடீர் பரபரப்பு..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக தமிழக கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில்  நடமாடுகின்றன. இதற்கிடையே நேற்று மாலை சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலம் செல்வதற்காக கார் ஒன்று திம்பம் மலைப்பாதை ஒன்றாவது கொண்டை ஊசி வளைவு அருகே திம்பம் மலை அடிவாரத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோர வனப்பகுதியில் இருந்து சாலைக்கு வந்த காட்டு யானையைக் கண்டு கார் ஓட்டுநர் காரை நிறுத்தினார். வெள்ளை நிற காரைக்கண்டு ஆக்ரோசமடைந்த காட்டு யானை காரின் அருகே வந்து தனது தும்பிக்கை மற்றும் முன்பக்க காலால் காரை எட்டி உதைத்தது. அப்போது ஓட்டுனர் லாவகமாக காரை முன் புறமாக இயக்கி யானையிடமிருந்து தப்பினார். காரை காட்டு யானை உதைத்ததால் காரின் பக்கவாட்டு பகுதி சேதம் அடைந்தது. இந்த காட்சியை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாக பகிரப்பட்டு வருகிறது..