உதகை அருகே கேத்தி பாலடா பகுதியில் வடநாட்டு பணியாளர் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் தொட்டியில் இன்று காலை பிணமாக கிடந்தது குறித்து கேத்தி காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி,பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இரவு, பகல் என பணியாற்றி வருகின்றனர்.
இந் நிலையில் கேத்தி பாலடா பகுதியில் உலகப்பன் என்பவருக்கு சொந்த மான SBA காரட் கழுவும் இயந்திர வளாக கிணற்றில், அங்கு வேலை செய்த பிரிய ரஞ்சன் மிஸ்ரா (வயது 33) என்பவரது உடல் பிரேதமாக கண்டெடுக்கப் பட்டுள்ளது. கேத்தி காவல் துறையினர் மேற் கொண்ட விசாரணையில் இரண்டு நாட்களாக பிரியரஞ்சன்மிஸ்ரா காணாமல் போனது தெரிய வந்தது.
இவர் பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். கடந்த 8 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடந்துள்ளது. மனைவி பூர்வீக கிராமத்தில் வசித்து வருகிறார்.
இன்று அங்கு இருக்கும் கேரட் கழுவுவதற்கு நீர் நிரப்பி வைக்கும் தொட்டியில் பிணமாக கிடந்துள்ளார்.
கேத்தி காவல் துறையினர் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.