கோவையில் நடை பயிற்சியில் இருந்த பெண்ணை தாக்கிய ஒற்றை ஆண் காட்டு யானை: மத்திய ரிசர்வ் படை பயிற்சி வளாகத்தில் பரபரப்பு

கோவையில் நடை பயிற்சியில் இருந்த பெண்ணை தாக்கிய ஒற்றை ஆண் காட்டு யானை: மத்திய ரிசர்வ் படை பயிற்சி வளாகத்தில் பரபரப்பு

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த கதிர்நாயக்கன் பாளையத்தில் மத்திய ரிசர்வ் படை பயிற்சி செயல்பட்டு வருகிறது.ரிசர்வ் படையில் உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் எப்போதும் யானை நடமாட்டம் காணப்படும். இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் பயிற்சி வளாக குடியிருப்பில் உள்ள ராதிகா என்பவர் நடை பயிற்ச்சியில் ஈடுபட்டிருந்தார் அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ஆண் காட்டு யானை சாலையை கடக்கும்போது ராதிகா யானை அருகில் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து யானையை பார்த்த பயத்தில் அவர் கூச்சலிடவே யானை அவரை தள்ளி விட்டு வேகமாக சென்றது.  இதனையடுத்து யானை தாக்கியதில் தலையில் படுகாயம் அடைந்த ராதிகாவை அங்குள்ளவர்கள் மீட்டு வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர் பின்னர் துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய ரிசர்வ் படை வளாகத்திற்குள் யானை புகுந்த தகவல் வனத்துறையினருக்கு அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வந்த வனத்துறையினர் காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். யானை தாக்கியதில் படுகாயம் அடைந்தவர் மத்திய ரிசர்வ் படை ஜஜியின் மெய் காவலர் மோகனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.