அனுமதி இன்றி குழி தோண்டி கேபிள் பதிக்க முயன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம்- தடுத்து நிறுத்திய பொதுமக்கள்..!

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தயிர்பள்ளம் புதூர் பஸ் ஸ்டாப்பில் இருந்து ராஜீவ் நகர் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு கொத்தமங்கலம் – சத்தியமங்கலம் மற்றும் பண்ணாரி சாலையை இணைக்கும் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான தார் சாலை உள்ளது.  அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், தோட்ட பகுதி விவசாயிகள், பவானிசாகர் மற்றும் புஞ்சை புளியம்பட்டியில் இருந்து பண்ணாரி அம்மன் கோவிலுக்கு செல்வோர் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த சாலையின் நடுவே தார் சாலையை பெயர்த்து எடுத்து ஆழமாக குழி தோண்டி கேபிள் பதிக்கும் பணியை தனியார் தொலைதொடர்பு நிறுவனம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இச்சாலை அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகி உள்ள நிலையில் திடீரென தார் சாலையின் நடுவே குழி தோண்டி கேபிள் பதிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதால் தார் சாலை முழுவதும் சேதம் அடைந்தது. இதைத் தொடர்ந்து கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தனியார் தொலைதொடர்பு நிறுவன அதிகாரிகளிடம் தயிர் பள்ளம் புதூர் பொதுமக்கள் தார் சாலையில் குழி தோண்டி கேபிள் பறிக்க அனுமதி பெற்றுள்ளீர்களா, இந்த தார் சாலையை தோண்டி சேதப்படுத்தினால் சரி செய்து தருவீர்களா என கேள்வி எழுப்பினர். இதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதை அடுத்து ஊர்ப்பொதுமக்கள் கேபிள் பதிக்கும் பணியை தடுத்து நிறுத்தினர். அனுமதி இல்லாமல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தினர் கேபிள் பதிப்பதற்காக குழி தோண்டி தார் சாலையை சேதப்படுத்தியதாகவும், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி  ஊர்ப்பொது மக்கள் சார்பில் முதலமைச்சரின் தனி பிரிவிற்கு மனு அனுப்பியுள்ளனர். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..