வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக உருவாகுமா..? வானிலை மையம் எச்சரிக்கை..!

வங்க கடலில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, பருவமழை மேலும் தீவிரமடையும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஒடிசாவில் சில பகுதியில் கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்றும் ஆகஸ்ட 6 முதல் 10 வரை ஒடிசாவில் பரவலாக மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்ககடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல்பகுதியில் சூறாவளி காற்றும் மணிக்கு 45 கி.மீ முதல் 50 கி.மீ வேகத்தில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுப்பெற்று புயலாக மாறக்கூடுமா என்று பின்னர் தெரியவரும்.

தென்மேற்கு பருவமழையையொட்டி தொடர்ந்து கனமழை பெய்து வரும் கேரளா மற்றும் கர்நாடகாவில் அடுத்த இரண்டு தினங்களில் மழை மெல்ல மெல்ல குறையும் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகள், சாலைகள் வெள்ளத்தினால் சேதமாகியுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று கனமழை தொடர்கிறது. காவிரி ஆற்றில் வெள்ள கரைபுரண்டு ஓடுகிறது. வைகை மற்றும் கொள்ளிடம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையிலும் கோவை மாவட்டம் வால்பாறையிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.