சேலம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் உள்ளது தலை வெட்டி முனியப்பன் கோவில். இந்த கோவிலை பொதுமக்கள் கடந்த மூன்று தலைமுறைகளாக போற்றி பாதுகாத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
ஆனால் புத்தர் சிலை தான் இப்படி தலை வெட்டி முனியப்பன் ஆக மாற்றப்பட்டது என்று நீண்ட நாட்களாக சர்ச்சை நீடித்து வந்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த திருக்கோவிலுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு அரசு சார்பில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பல கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கோவில் நிலத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருமலை நாயக்கர் சிலையும் உள்ளது.
இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் வழிபடுவது தலை வெட்டி முனியப்பன் சிலை அல்ல அது புத்தர் சிலை என்று சிலர் கூறி வந்தனர். இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய புத்தர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன், 2011ல் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் சேலம் மாவட்டம் கோட்டை பெரியேரி கிராமத்தில் உள்ள’தலைவெட்டி முனியப்பன் கோவிலில் இருப்பது புத்தர் சிலை என்றும் அங்குள்ள 3 சென்ட் நிலம், புத்தர் சங்கத்துக்குச் சொந்த மானது என்றும் குறிப்பிட்டிருந்தார். அதோடு அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்கக்கோரி, அறநிலையத் துறைக்கும், முதலமைச்சருக்கும் மனு அளித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் ‘சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா, புத்தர் சிலையா என ஆய்வு செய்து, தமிழக தொல்லியல் துறை ஆய்வு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இதனையடுத்து நடைபெற்ற ஆய்வில். சிலையின் தலை பகுதி புத்தருக்கான அடையாளங்களுடன் உள்ளதாக தொல்லியல் துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையில், தொல்பொருள் மற்றும் வரலாற்று சான்றுகளை கவனமாக ஆய்வு செய்ததில், அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான் என அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். அப்போது அறநிலை துறையின் சார்பில் தலைவெட்டி முனியப்பன் சிலை என கருதி பக்தர்கள் பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளதால் அதனை அரசு வசமே தொடர அனுமதிக்க வேண்டுமென வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்கு பிறகு நீதிபதி ஆனந்த், பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என்பதை தொல்லியல் துறை தெளிவாகவும் திட்டவட்டமாகவும் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்றும் இந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு தவறான அடையாளங்களுடன் தொடர அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இந்த கோவில் இருக்கும் இடத்தை தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்றும் அங்குள்ளது புத்தர் சிலை தான் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிலில் பொது மக்களை அனுமதிக்கலாம் ஆனால் புத்தர் சிலைக்கு பூஜைகள் உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதி இல்லை என்பதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும் என கூறி வழக்கு முடிக்கப்பட்டது.
Leave a Reply