இரவு விடுதியில் பயங்கர தீ விபத்து: 4 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழப்பு – 40 பேர் படுகாயம்..

இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 பேர் பலியான நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து இரவு விடுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்ததாக மீட்பு சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பாங்காக்கிலிருந்து தெற்கே சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோன்புரி மாகாணத்தின் சத்தாஹிப் மாவட்டத்தில் உள்ள மவுண்டன் பி நைட்ஸ்பாட் என்ற இடத்தில் அதிகாலை 1:00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ கொழுந்துவிட்டு எரிந்ததை அடுத்து, இரவு விடுதிக்கு வந்திருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். அவர்களின் ஆடைகளில் தீப்பற்றி எரிந்ததை, மீட்புக்குழுவினர் விரைந்து அணைத்தனர்.

இந்த கோர விபத்தில் நான்கு பெண்கள் மற்றும் ஒன்பது ஆண்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் காவல்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.