வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி… தமிழகம், புதுச்சேரி இடையே நாளை கரையை கடக்கிறது..!

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியது.

இது நாளை (12 ஆம் தேதி) தமிழகம்-புதுச்சேரி கடற்கரை இடையே கரையைக் கடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையைக் கடந்த பின்னர் அரபிக்கடலை நோக்கி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இன்று 11 ஆம் தேதி முதல் 14-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்று (11-ம் தேதி) திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 3 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வட கடலோர தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுச்சேரியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. நேற்று விடியவிடிய மழை கொட்டித் தீர்த்த நிலையில் விடிந்தும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது. கனமழையை அடுத்து ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல், அரியலூர், பெரம்பலூர், கடலூர் , விழுப்புரம் மாவட்டங்களிலும் கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 29 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளித்து புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்துவரும் ராணிப்பேட்டை, திண்டுக்கல், நீலகிரி, தேனி ஆகிய 4 மாவட்டங்களில் அதிகனமழை பெய்து வருகிறது. இதனை ஒட்டி அந்தந்த மாவட்ட நிர்வாகம் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் உதவியை கோரிய நிலையில் இந்த 4 மாவட்டங்களுக்கும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.