நாங்கள் தேர்தல் அறிக்கையில் சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளோம்-ஈரோடு திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின்..!

ட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் சொல்லாத பல திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறோம் என ஈரோட்டில் நடந்த திருமண விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

ஈரோட்டில் நடைபெற்ற ஈரோடு தெற்கு மாவட்ட கழகத் துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண விழா மேட்டுக்கடையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமண தம்பதிகளை வாழ்த்தினார். அப்போது, பேசிய முதல்வர் ஸ்டாலின்;- நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு மிகப் பெரிய சோதனையை சந்தித்தோம். கொரோனா என்கிற ஒரு கொடிய நோயைச் சந்தித்தோம். அதிலிருந்து சிறிது மீண்டோம். மீண்டவுடன், பார்த்தீர்களென்றால், தமிழ்நாட்டில் தொடர்ந்து பத்துநாள் கூட இடைவெளியின்றி மழை பெய்கிறது. இப்படித்தான் நான் சென்னையில் முதன்முதலாக 1996-ஆம் ஆண்டு மக்களால் நேரடியாக மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அடுத்த நாளிலிருந்து மழை ஆரம்பித்துவிட்டது.

சென்னை முழுக்க மழை பெய்து கொண்டு இருந்தது. அப்போது முதலமைச்சராக நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் பொறுப்பில் இருந்தார். முதலமைச்சர் என்கின்ற அந்த முறையில் அவரை அந்த பாதிக்கப்பட்ட இடங்களையெல்லாம் பார்வையிடுவதற்காக ஒரு வேனில் அழைத்துச் சென்றோம். எல்லா இடங்களையும் பார்வையிட்டு வந்தார். என்னென்ன பணிகளெல்லாம் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு உத்தவிட்டாரோ, அரசின் சார்பில் நிதி உதவிகளெல்லாம் செய்தார். இப்படி பார்வையிட்டுக்கொண்டு வரும்போது வேடிக்கையாக ஒரு வார்த்தையை சொன்னார், என்னவென்றால், சென்னைக்கு எப்போது ஸ்டாலின் மேயராக வந்தாலும், மழை பேயராக இருக்கிறது என்று சொன்னார், அது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுமாதிரி, நாம் என்றைக்கு ஆட்சிக்கு வந்தோமோ, அன்றிலிருந்து மழை இடைவிடாமல் பெய்துகொண்டே இருக்கிறது.

இங்கே நம்முடைய மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் இந்தச் சீர்திருத்தத் திருமணத்தைப் பற்றிப்பேசுகிறபோது சில செய்திகளைச் சொன்னார்கள். உண்மையான சுயமரியாதைக்காரனாக இருக்கிறேன் என்று சொன்னார்கள். உள்ளபடியே எங்களுக்கெல்லாம் பெருமை. இது யாருடைய மண், தந்தை பெரியார் பிறந்த மண். இதைக்கூட நம்முடைய முத்துசாமி பேசுகிறபோது சொன்னார். மூன்று தலைவர்களுடைய சிலைகள் வைக்கப்பட்டிருக்கிறது. இது கலைஞருடைய குருகுலம், தந்தை பெரியார் பிறந்த இந்த மாவட்டம். மூன்று இல்லை, முந்நூறு சிலைகள் கூட விரைவில் இந்த மாவட்டத்தில் வைக்கப்படும்.

இதுபோன்ற சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணங்கள் ஒரு காலத்தில் நடைபெற்றால் கேலி செய்தவர்கள், கிண்டல் செய்தவர்கள், கொச்சைப்படுத்தி பேசியதெல்லாம் உண்டு. ஆனால் இன்றைக்கு சீர்திருத்த திருமணம் இல்லையென்றால்தான் ஆச்சரியமாக இருக்கிறது. அந்த அளவிற்கு இன்றைக்குப் பரவி இருக்கிறது. காரணம் என்ன? 1967-இல் முதன்முதலாகத் தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அறிஞர் அண்ணா அவர்கள் முதன் முதலாக சட்டமன்றத்தில் நுழைந்து சீர்திருத்தத் திருமணங்கள் அனைத்தும் இனிமேல் சட்டப்படி செல்லுபடியாகும் என்கிற தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றித் தந்தார்கள். சட்டப்படி, முறையோடு நடைபெறக்கூடிய திருமணம்தான் செல்லும் என்கிற முறையில் அங்கீகாரத்தை பெற்ற வகையில்தான் நாளைய தினம் இந்தச் சீர்திருத்த திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்கூட்டி நாங்கள் எல்லாம் கலந்து கொண்டு வாழ்த்துவதில் பெருமைப்படுகிறோம்.

எப்படி நாம் ஆட்சிக்கு வந்து மழை தொடர்ந்து பெய்து உழவர்களுக்கும், மக்களுக்கும், வேளாண்மைக்கும் பாதிப்பில்லாமல், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படாமல் ஒரு சுபிட்சமான நிலையை நாட்டில் உருவாக்கி இருக்கிறதோ, அதே நிலையில், இந்த ஆட்சி தொடர்ந்து தேர்தல் நேரத்தில் என்னென்ன உறுதிமொழிகளை, வாக்குறுதிகளை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செய்வோம் என்று மக்களிடத்திலே தேர்தல் அறிக்கையில் எடுத்துச் சொன்னோமோ, அதைவிடப் பல மடங்கு சொல்லாத வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி என்பதும் உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே இந்த ஆட்சிக்குப் பக்கபலமாக நீங்கள் என்றைக்கும் இருக்க வேண்டும் என்ற இந்த அன்பான வேண்டுகோளை இந்த நேரத்தில் எடுத்து வைக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.