பள்ளிக்கு சென்ற நடமாடும் நூலகம்: புத்தகங்களை வாசித்து பயனடைந்த மாணவ, மாணவிகள்..!

கோவை கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நடமாடும் நூலகத்தை பார்வையிட்ட மாணவ, மாணவிகள், புத்தகங்களை வாசித்து பயனடைந்தனர்.

இதுதொடா்பாக, மாநகராட்சி ஆணையா் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவை மாநகராட்சி சார்பில் ‘உங்களைத் தேடி நூலகம்‘ என்னும் பெயரில் நடமாடும் நூலகத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, கா.ராமசந்திரன், செந்தில்பாலாஜி ஆகியோா் சில மாதங்கள் முன்பு கோவையில் தொடங்கி வைத்தனர்.
அதன் தொடர்ச்சியாக மாநகராட்சியில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் நூலகம் பயன்பாட்டுக்கு வந்தது. கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம் கெம்பட்டி காலனியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடமாடும் நூலகத்தில் மாணவ, மாணவிகள், மக்கள் ஏராளமானோர் புத்தகங்களை படித்து பயனடைந்தனர். இன்று முதல் ரத்தினபுரி, ராமகிருஷ்ணாபுரம், வெங்கிட்டாபுரம், கே.கே.புதூா், ராமநாதபுரம், டாடாபாத், ஒப்பணக்கார வீதி, பீளமேடு, வரதராஜபுரம், செல்வபுரம், புலியகுளம், உப்பிலிபாளையம், கோட்டைமேடு, சங்கனூர், பி.என்.புதூர்,கோயில்மேடு, பாப்பநாயக்கன்பாளையம், மசக்காளிபாளையம், எஸ்.ஐ.ஹெச்.எஸ்.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடமாடும் நூலகம் பயனடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதை அனைத்து மாணவ, மாணவிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.