இந்தியன் வங்கி கிளையின் மேல் தளத்தில் திடீர் தீ விபத்து- போராடி கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை சாலை சந்திப்பில் இந்தியன் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. வங்கியின் இரண்டாவது தளத்தில் இருந்து, நேற்று, திடீரென கரும் புகை வந்ததை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து கீழ்த்தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்தபோது, அங்கு கட்டிடத்தின் உரிமையாளர் சாந்தகுமாருக்கு சொந்தமான ஆவணங்கள் வைக்கப்பட்டு இருக்கும் அறையில், தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதையடுத்து, வங்கி அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தாராபுரம் நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான பாத்திருக்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கட்டிட உரிமையாளருக்கு சொந்தமான ஆவணங்கள் மட்டும் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் வங்கிக்குச் செல்லும் எலக்ட்ரிக்கல் ஒயர் மற்றும் ஏசி இன்வெர்ட்டர் ஆகியவை மட்டும் பாதிக்கப்பட்டதாகவும் இந்தியன் வங்கியில் உள்ள பணம் மற்றும் ஆவணங்களுக்கு எந்தவித சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.