1945க்கு பிறகு மெகா போருக்கு தயாராகும் ரஷ்யா: என்னமோ திட்டம் இருக்கு… பிரிட்டன் பிரதமர் போரிஸ்.!!

உக்ரைனுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு ரஷ்யா தயாராகி வருவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் எல்லை பெலாரஸில் ரஷ்யா போர் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சூழலில், பிரிட்டன் பிரதமரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் உக்ரைன் இணையவுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின. நேட்டோ கூட்டணியில் உக்ரைன் இணைந்தால், அது தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கிவிடும் என எண்ணிய ரஷ்யா, அந்நாட்டின் எல்லைய்ல் படைகளை குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், உக்ரைன் எல்லைப் பகுதிகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை ரஷ்யா நிறுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி, உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸில் பெரிய அளவிலான போர் பயிற்சியிலும் ரஷ்ய ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இதனால் உக்ரைனை எந்நேரமும் ரஷ்யா தாக்கும் என அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தெரிவித்து வருகின்றன. ஒருவேளை, உக்ரைன் மீது போர் தொடுத்தால் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் எனவும் ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. எனினும், இதுகுறித்து கவலைப்படாத ரஷ்யா, தனது போர் பயிற்சியை தொடர்ந்து வருகிறது. மேலும், நேற்று ரஷ்யா சார்பில் அணு ஆயுத ஏவுகணை சோதனைகள் நடத்தப்பட்டதும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ஜெர்மனியின் முனிச் நகரில் சர்வதேச பாதுகாப்பு தொடர்பான மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, உக்ரைன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு இடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டியளித்தார். அவர் கூறுகையில், “உக்ரைனை சுற்றிலும் 1 லட்சத்து 90 ஆயிரம் ரஷ்ய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். உக்ரைனில் ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் அதிகம் உள்ள டான்போஸ் பிராந்தியத்தின் வழியாக அந்நாட்டுக்குள் நுழைந்து தலைநகர் கீவ்-ஐ சுற்றி வளைப்பதே ரஷ்யாவின் வியூகமாக இருப்பதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1945-க்கு பிறகு ஐரோப்பியாவில் மிகப்பெரிய போரை நடத்த ரஷ்யா தயாராகி வருகிறது. போர் மூண்டால் உக்ரைன் மட்டுமல்ல ரஷ்யாவுக்கும் பெருமளவில் சேதம் ஏற்படும். உக்ரைன் போரை தடுக்க பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன” என போரிஸ் ஜான்சன் கூறினார்.