‘பிராஜெக்ட் பள்ளிக்கூடம்’ மூலம் பாலியல் குற்றங்கள் குறித்து 48 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு..!!

கோவை: 18 வயதுக்கு குறைவான இளம்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல்
குற்றங்கள் அதிகரித்துவருகிறது.

பெரும்பாலான குழழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் குறித்தோ, அது
குறித்து யாரிடம் கூற வேண்டும் என்பது பற்றியோ முழுமையாக தெரிவதில்லை.
இதை தவிர்க்க கோவை மாவட்ட போலீசார் சார்பில் பிராஜெக்ட் பள்ளிக்கூடம்
என்ற சிறப்புத் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:-
குழந்தைகளுக்கான பாதுகாப்பை மையப்படுத்தி பிராஜெக்ட் பள்ளிக்கூடம்
திட்டம் கடந்த ஜூன் 30-ந் தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 1
முதல் 12-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படுகிறது.

10 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தவறான தொடுதல், பாலியல்
துன்புறுத்தல் என்றால் என்ன, அது தொடர்பாக யாரிடம் தெரிவிக்க வேண்டும்
என்பது குறித்து விளக்கப்படுகிறது. 10 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு
பாலியல் குற்றங்கள், அதற்குரிய தண்டனைகள், பாலியல் குற்றத்தில் கைதாகி
சிறைக்கு சென்று வந்தால் எதிர்கால வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள், சமூக
வலைதளங்களை கையாளுவது உளிட்டவை குறித்து விளக்கப்படுகிறது.
10 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் குற்றங்கள் எவை? அதனால்
ஏற்படும் உடல், மன ரீதியிலான மாற்றங்கள், எதிர்கால பாதிப்புகள்,
சமூகவலைதளங்களைக் கையாளுதல் ஆகியவை குறித்து விளக்கப்படுகிறது. ஒரு
நாளைக்கு 5 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் மகளிர் நல அலுவலர்,
குழந்தை நல அலுவலர் என 2 பயிற்சி பெற்ற போலீசார் உள்ளனர். இவர்கள் மூலம்
அரசு, தனியார் என அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருகிறது. இதுவரை 48 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் 56 போக்சோ வழக்குகள் பதிவு
செய்யப்பட்டுள்ளன.156 வழக்குகளுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. ஒருவர் போக்சோ வழக்கில் கைதானாலும் அவர் குண்டர்
தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது.
பிராஜெக்ட் பள்ளிக்கூடம் திட்ட விழிப்புணர்வு மூலம் வளர்ப்பு தந்தையால்
பாதிக்கப்பட்ட சிறுமி, நண்பரால் பாதிக்கப்பட்ட சிறுமி என 2 பேர் தைரியமாக
வந்து தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல்களை தெரிவித்துள்ளனர்.
இவர்களுக்கு துன்புறுத்தல் அளித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.