கோவையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு ..!

கோவை மாவட்டத்தில் சுமாா் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலப்
பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்துள்ளன.
தடயங்கள்
இது குறித்து திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தமிழ்த் துறைப்
பேராசிரியா் ச.ரவி கூறியிருப்பதாவது:-
வரலாற்றுக் காலத்துக்கு முன் சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்
கோவையில் இருந்து கணுவாய் வழியாக தடாகம், வீரபாண்டி வழியாக கேரளம்
செல்லும் பெருவழிச்சாலையில் தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில்
கிடைத்திருக்கின்றன. இது தொடா்பான கள ஆய்வு அண்மையில் நடைபெற்றது. இந்த ஆய்வில் எனது தலைமையில் கேரள மாநிலம் சாலையூா் ஊராட்சித் தலைவா் ராமமூா்த்தி, பழங்குடியினா் தொடா்பான ஆய்வில் ஈடுபட்டு வரும் மணிகண்டன், ஆய்வாளா்கள் காா்த்தி, மணிகண்டன், சமூக ஆா்வலா் சதாசிவம் ஆகியோா் ஈடுபட்டனா்.

ஆனைகட்டி, சாலையூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில்,
வரலாற்று காலத்து மக்கள் பயன்படுத்திய 5 சுடுமண் மட்கலங்கள், 2
தாங்கிகள், ஒரு மூடி, மூன்று சிறு கப்புகள் கிடைத்துள்ளன. இவை கொங்கு
பகுதிக்கே உரிய இச் சுடுமண் மட்கல நாகரிக பண்பாடு கேரள எல்லைப் பகுதியில்
உள்ள ஆனைகட்டி வரை பரவி இருப்பதை அறிய முடிகிறது.
இந்தப் பொருள்களை சாலையூா் பஞ்சாயத்துத் தலைவா் வட்டுலுக்கி,
மட்டத்துக்காடு பகுதிகளில் சேகரித்திருக்கிறாா். மேலும் இந்தப் பகுதிகளை
ஆய்வுக்கு உள்படுத்தியதில் உடைந்த எண்ணற்ற கருப்பு, சிவப்பு சிதைந்த
மட்கல சுடுமண் ஓடுகளை ஆனைகட்டி, வட்டுலுக்கி, மட்டத்துக்காடு, சோலையூா்,
பிலாமரம், கோபனாரி பகுதிகளில் மேற்பரப்பாய்வுகளில் சேகரிக்க முடிந்தன.
செப்புப் பொருட்கள்
மேலும் இந்த ஆய்வில் இறப்பு சடங்குக்காக கல்வட்டம், கல்பதுக்கை,
முதுமக்கள் தாழியின் சிதையுற்ற பகுதிகள் கண்டறிய முடிந்தன. இவை இன்றைய
கேரளம், ஆந்திரம், கா்நாடகம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய அகன்ற தமிழக
வரலாற்றுக் காலமாகிய சங்க காலத்தைச் சோ்ந்தவை என்பதற்கு
இப்பெருங்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்கள் நினைவுபடுத்துகின்றன.
இத்துடன் 2 செப்புப் பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன. செம்புக்கால
பண்பாடு வடநாட்டுக்குரியவை. எனவே இப்பகுதியுடன் வடநாட்டுத் தொடா்பு
இருப்பதையும் கண்டறிய முடிந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.