தர்மலிங்கேஸ்வரர் மலை – மருதமலையில் கார்த்திகை தீபத்திருவிழா

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை அருகே மலை மீது உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது .இதை யொட்டி மூலவர் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தன. திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோவில் மலை உச்சியில் 100 கிலோ நெய் ஊற்றப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு சென்று இருந்த பக்தர்கள் சிவசிவா என முழக்கமிட்டனர். சங்கு ஊதி தீபஜோதி வழிபட்டனர். மருதமலை முருகன் கோவில் நேற்று சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது .அதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவில் முன்புறம் உள்ள பீடத்தில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. நியூ சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் உள்ள விளக்குகள் மடத்தில் நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன. கோனியம்மன் கோவில் வளாகத்தில் நேற்று விளக்கு பூஜை நடைபெற்றது .இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். மேலும் கோவில் வளாகத்தில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரியும் சொக்குப்பனையை அக்னிமயலிங்கமாக பக்தர்கள் வழிபட்டனர். கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலிலும் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இதுபோல கோவையில் உள்ள சிவாலயங்களில் நேற்று மகா தீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. பொதுமக்கள் வீடுகளின் முன்பு கோலம் போட்டு அகல் விளக்கு தீபம் ஏற்றினார். பூஜை அறைகளிலும் விளக்கு ஏற்றி வழிபட்டனர். காரமடை அருகே மாதேஸ்வரன் கோவிலில் 16வது ஆண்டு கார்த்திகை தீபத்தை ஒட்டி தீப தூணில் தீபம் ஏற்றப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அரோகரா அரோகரா எனக் கோசம் போட்டு மாதேஸ்வரனை வழிபட்டனர். இதனை தொடர்ந்து மாதேஸ்வரனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.