நாட்டில் ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வரும் சூழலில் காவல் துறை, சைபர் கிரைம் துறை மற்றும் மத்திய, மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
இதுவரையிலும் தவறு நடந்த பிறகு, பணத்தை எப்படி மீட்பது, குற்றவாளி யார் என்ற கோணத்திலேயே விதிகளும், செயல்பாடுகளும் இருந்தன. ஆனால் இனி ஆன்லைன் பண மோசடியை முன்கூட்டியே தடுக்கும் விதமாக ரிசர்வ் வங்கி புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு விதிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் படிப்படியாக அமலுக்கு வர இருக்கின்றன. இதில் ஆன்லைனில் மோசடி கும்பலுக்கு பணப்பரிமாற்றம் நடப்பதைத் தடுக்கும் வகையில் 3 முக்கிய விதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த விதிகள் குறித்து பொதுமக்கள் டிசம்பர் 14-ம் தேதி வரை கருத்து கூறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வங்கிக்கும் ஏற்ப டிஜிட்டல் பனப் பரிவர்த்தனை விதிகள் மாறுபடுகின்றன. இருப்பினும் சைபர் மோசடியால் ஒரு வாடிக்கையாளர் பணத்தை இழந்தால், அதற்கு வங்கிகள் தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் வரைவு விதியிலும் இது இடம்பெற்றுள்ளது.
புதிய வங்கிக் கணக்கில் டிஜிட்டல் பரிவர்த்தனை முதலில் ஆஃப் செய்யப்பட்டு இருக்கும். வாடிக்கையாளர் ஆன் செய்த பிறகே அது செயல்படும். ஒரு வங்கிக் கணக்கில் தவறான லாகின் எண்ணிக்கை அதிகமானால், வங்கி அந்தக் கணக்கை லாக் செய்ய வேண்டும். இல்லையெனில் இது வங்கியின் அலட்சியம் எனக் கருதப்படும்.
ரிசர்வ் வங்கியின் புதிய வரைவு விதிமுறையின் படி, வாடிக்கையாளர்களுக்கு நிறுத்து பொத்தான் என்ற வசதி கிடைக்கும். இதன் மூலம் வங்கிக் கணக்கில் இருந்து ஒரே கிளிக்கில் பணப் பரிமாற்றத்தை நிறுத்த முடியும்.
நமது வங்கிக் கணக்கில் தெரிந்தவர்களுக்கு பணம் அனுப்பும் போது யாரும் பாதுகாப்பற்ற மனநிலைக்குச் செல்வதில்லை. மாறாக தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்பும் போது சற்று பதட்டமாக இருக்கும். சரியான நபருக்குத் தான் பணம் அனுப்புகிறோமா என்று. இந்தப் பதட்டத்தை தவிர்க்க இனி உங்கள் வங்கிக் கணக்கில் உங்களுக்கு நம்பகமான நபர் ஒருவரை பதிவு செய்து கொள்ளலாம்.
இதன்மூலம் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அதற்கு நம்பகமான நபரின் ஒப்புதல் தேவைப்படும். அவர் உங்களின் பரிவர்த்தனை பாதுகாப்பானதா என்று மட்டும் தான் சரிபார்க்க முடியும். மற்றபடி உங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை அவரால் அணுக முடியாதுவங்கி அலட்சியம் தொடர்பான விதிகள் 2027 ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது. நிறுத்து பொத்தான் மற்றும் நம்பகமான நபர் வசதிகள் 2027 ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன.ரிசர்வ் வங்கியின் இந்த புதிய வரைவு விதிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகமோ அல்லது ஆட்சேபனை இருந்தால் வருகின்ற டிசம்பர் 14-ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம்.ரிசர்வ் வங்கி இணையதளத்தில் இருக்கும் ‘கனெக்ட் 2 ரெகுலேட்’ பகுதி வழியாவோ அல்லது இ-மெயில் முகவரி மூலமாகவோ பொதுமக்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கலாம்









