நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம்

திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதியரசர் ஜி.ஆர்.சாமிநாதன் இன்று தனது குடும்பத்தினருடன் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் ஜி.ஆர். சாமிநாதன், மலை மேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் எனத் தீர்ப்பு வழங்கினார்.இந்தத் தீர்ப்பை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தொடர்ந்து உச்சநீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில், இந்த வருடம் மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீதியரசர் ஜி.ஆர். சாமிநாதன் இன்று (நவ. 22) தனது குடும்பத்துடன் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு வருகை தந்து பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தார்.தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நீதியரசர் ஜி.ஆர். சாமிநாதன் சாமி தரிசனம் செய்வதற்காகத் திருப்பரங்குன்றம் வந்தமையால் கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.