திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா: பக்தர்களுக்கு கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

உலக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர்.அந்த வகையில் கார்த்திகை தீபத்திற்கான பிரசித்தி பெற்ற தலமாக அண்ணாமலையார் கோயில் திகழ்கிறது. தற்போது கார்த்திகை மாதம் தொடங்கிய நிலையில் வரும் நவம்பர் 24ஆம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறவுள்ளது.

அதிகாலை நான்கு மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்தாண்டு முதல்முறையாக இந்து சமய அறநிலை துறை சார்பில் பரணி தீபம் மற்றும் மகா தீப தரிசனத்திற்கான 3 ஆயிரம் இலவச டிக்கெட்களை பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி ருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் பக்தர்கள் 500 நுழைவு சீட்டுகள் பதிவு செய்து கொள்ளலாம். திருவண்ணாமலை மாவட்டத்தை தவிர்த்து பிற மாவட்டங்களைச் சேர்ந்த 500 பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மகா தீபத் திருவிழாவை ஒட்டி பக்தர்கள் நலன் கருதி கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வெளியிட்டார். அதன்படி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா தீபத்தன்று திருவண்ணாமலைக்கு வருகை தரக்கூடிய பக்தர்களின் நலன் கருதி அவர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்கள் மற்றும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மைய தொலைபேசி எண்கள் 04175-233344, 04175-233345 மற்றும் 8072797683 என்ற செல்போன் வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் அறிவித்துள்ளார்.