திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் ராஜகோபால்.
இவர், சில கடந்த சில மாதங்களுக்கு முன், காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க வந்த பெண் ஒருவரிடம், செல்போன் எண்ணை பெற்று வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். இதற்கு பதில் கிடைக்காத நிலையில் செல்போனில் அழைத்துள்ளார். இது போன்ற செயல்களை தொடர்ந்து அவர் தவறான நோக்கத்துடன் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அந்த பெண் காவல்துறை உயரதிகாரிகளுக்கு புகார் அளித்திருந்தார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண்ணிடம் எஸ்ஐ அத்துமீறியது உறுதிசெய்யப்பட்டது.
இது தொடர்பான அறிக்கை திண்டுக்கல் சரக டிஐஜி மற்றும் தென்மண்டல ஐஜிக்கு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் எஸ்.ஐ ராஜகோபால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தொடர்ந்து துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது. இதில், குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையானது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து எஸ்ஐ ராஜகோபாலை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி, ஒழுங்கு நடவடிக்கை அதிகாரியான மதுரை சரக தென்மண்டல ஐ.ஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். வத்தலக்குண்டு இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்: இதேபோல், திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காவல்நிலைய ஆய்வாளர் கவுதமன், கடந்த 2024ல் தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றியபோது,
பெண் ஒருவர் கொடுத்த புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்திய ஒழுங்கு நடவடிக்கை குழு, அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது. இதையடுத்து கவுதமனை கட்டாய பணி நீக்கம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். ஒரே நாளில் திண்டுக்கல் மாவட்டத்தில் பணியாற்றிய எஸ்ஐ டிஸ்மிஸ் மற்றும் இன்ஸ்பெக்டர் கட்டாய பணி நீக்கம் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









